×

வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட்டை இயக்க முயன்றால் இருமடங்கு உத்வேகத்துடன் மக்களை திரட்டி மதிமுக போராடும்: துரை வைகோ அறிவிப்பு

சென்னை: வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயன்றால், இருமடங்கு உத்வேகத்துடன் மக்களை திரட்டி மதிமுக போராடும் என்று துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 2018 மே 28ம்தேதி தமிழ்நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிட்டது. இந்நிலையில் ஆலையின் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தது.

ஆலை பராமரிப்பு பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்தது. இதன்படி கடந்த ஏப்ரல் 10ம்தேதி, ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளஅனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடைபெற உள்ள கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்.

ஆனால் வேதாந்தா நிறுவன விளம்பர அறிவிப்பில், உச்ச நீதிமன்ற ஆணையையும் தமிழ்நாடு அரசின் ஆணையையும் அப்பட்டமாக அத்துமீறும் நடவடிக்கை. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர்ந்து தானே வாதாடினார். பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கில் வாதாடி 2010ம் ஆண்டு இந்த ஆலையை மூட வைத்தார். ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் இன்னுயிரை இழந்து இந்த நச்சு ஆலையை நிரந்தரமாக மூடியுள்ளனர். அவர்கள் தியாகம் வீண்போகாது. வேதாந்த குழுமம் மீண்டும் நச்சு ஆலையை இயக்க முற்படுமானால், 1996ல் நடந்த போராட்டங்களை விட இரண்டு மடங்கு உத்வேகத்துடன் மக்களை திரட்டி மதிமுக போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட்டை இயக்க முயன்றால் இருமடங்கு உத்வேகத்துடன் மக்களை திரட்டி மதிமுக போராடும்: துரை வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MDMK ,Vedanta Group ,Sterlite ,Durai Vaiko ,Chennai ,Dinakaran ,
× RELATED மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்