×

திருப்பத்தூர் அருகே அதியமான் பெருவழிக்கல்வெட்டு கண்டெடுப்பு: கி.பி.13ம் நூற்றாண்டை ேசர்ந்தது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான பெருவழிக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் பேராசிரியர்கள் மோகன்காந்தி, மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், காணிநிலம் முனிசாமி, நல்லாசிரியர் சுந்தரம், பேராசிரியர் கலைச்செல்வி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வரலாற்று சிறப்புமிக்க வணிகர்களுக்கு வழிகாட்டும் அதியமான் பெருவழிக் கல்வெட்டு ஒன்றை திருப்பத்தூர் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி என்ற ஊரில் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து மோகன்காந்தி கூறியதாவது : சங்க காலத்தில், அதியமான் அரச மரபினர் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் அதியமான்களை பற்றி குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் “தகடூர்“ என்றழைக்கப்பட்ட நகரமே இன்றைய “தருமபுரி“ ஆகும். திருப்பத்தூர் தருமபுரி நெடுஞ்சாலையில் “கொண்டப்ப நாய்க்கன்பட்டியில், அதியமான் வழி வந்த அரசர்கள், அதியமான் பெருவழிக்கல்லை அக்காலத்தில் அமைந்துள்ளனர்.

அதியமான் பெருவழி நாவற் தாவளத்துக்கு காதம் 2 யக என்று 4 வரிகளில் கல்வெட்டு வாசகம் வருகிறது. இப்பெருவழிக்கல் உள்ள இடத்திலிருந்து “நாவற்தாவளம்“ என்னும் இடம் 21 காதம் தூரத்தில் உள்ளது என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பெருவழிக்கல்லில்,”அதியமான் பெருவழி, நாவற் தாவளத்துக்குக் காதம் 21” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.13 நூற்றாண்டாகும். அதியமான்கள் ஆட்சியில் “நாவற்தாவளம்“ என்பது வணிகர்களும் வழிப்போக்கர்களும் தங்கி உணவு உண்ணும் இடமாக விளங்கியுள்ளதை அறிய முடிகிறது. பழைய காலத்தில் வழங்கி வந்த பெருவழியே இன்றைக்கு நெடுஞ்சாலை (Highways) என்று வழங்கப்படுகிறது. பழைய பெருவழிகளில் இருந்த தாவளங்கள் மறைந்து இன்றைக்கு உணவகம் மற்றும் தங்கும் விடுதியாக உருவெடுத்துள்ளன.

அதியமான் பெருவழி கல்வெட்டு கிடைத்துள்ள பகுதி திருப்பத்தூர் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் இருந்து சரியாக 50 கி.மீ தூரம் வருகிறது. 50 கி.மீ 21 என்னும் காதத்தால் வகுத்தால் 2.3 கி.மீட்டர் வருகிறது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தின் வழியாக கிருட்டிணகிரி பகுதியில் வணிகம் செய்யச் சென்ற வணிகர்களுக்கு வழிகாட்டும் விதமாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாவளம் என்பது வணிகர்கள் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்ல ஏதுவாகவும் வணிகத்தை பெருக்குவதற்காகவும் அன்றைய அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட ஊர். இந்த ஊர் இன்றைக்கும் வளமான ஊராக உள்ளது. தென்பெண்ணை ஆறு பாயும் ஊராக உள்ளது. சுற்றிலும் சிறு சிறு மலைகளும் தரைக்காடுகளும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் ஊராக உள்ளது.

இவ்வூரில் சோழர் காலத்தை சேர்ந்த பழமையான புலியோடு சண்டையிட்டு உயிர் விட்ட வீர மறவனுக்கு எடுக்கப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் உள்ளது. எனவே இவ்வூர் வணிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்கிறது. இவ்வூர் வழியாக தருமபுரி ராயக்கோட்டை, தளி, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கும் பயணிக்க முடியும் என்பதால் பெரிய வணிக சந்தையாக இவ்வூர் விளங்கியிருக்க வேண்டும் என்று கருதலாம். இவ்வாறு மோகன்காந்தி கூறினார்.

The post திருப்பத்தூர் அருகே அதியமான் பெருவழிக்கல்வெட்டு கண்டெடுப்பு: கி.பி.13ம் நூற்றாண்டை ேசர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Athiyaman Highway Stone ,Tirupattur ,Tirupathur ,Tirupattur Pure Heart College ,Atiyaman Peruvahkevet ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...