×

சோழவந்தான் பகுதியில் புவிசார் குறியீடு கிடைத்தும் வாடி வதங்கும் வெற்றிலை சாகுபடி

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் வெற்றிலை சாகுபடியை மேம்படுத்த, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு காப்பீடு, கடன் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் வாழ்வியலில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு. விஷேசங்கள் அனைத்திலும் தவறாமல் இடம் பெறுவது வெற்றிலையாகும். கிராமங்களில் தாத்தா, பாட்டிகளிடம் வெற்றிலை போடும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் வெற்றிலை பயன்படுகிறது. மதுரைக்கு மல்லி, காஞ்சிக்கு பட்டு, சேலத்திற்கு மாம்பழம் என ஊருக்கு ஒரு பெருமை இருப்பது போல், மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு பெருமை சேர்ப்பது வெற்றிலை. இந்த வெற்றிலைக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு உண்டு.

பெருமை படுத்திய புவிசார் குறியீடு…
மங்கல விழாக்கள் ஆனாலும் கோயில் அபிஷேகம், மாியாதையானாலும் முதலில் இருப்பது வெற்றிலைதான். கருவறை முதல் கல்லறை வரை சம்பிரதாயங்கள் அனைத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை பல்வேறு நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களை கொண்டது. சோழவந்தான் பகுதியில் விவசாயிகளும், தொழிலாளர்களும் வெற்றிலை கொடிக்காலுக்கு மிகுந்த மரியாதை தருவர். செருப்பு அணிந்து வெற்றிலை கொடிக்காலுக்குள் செல்ல மாட்டார்கள். இத்தகைய சிறப்பான சோழவந்தான் வெற்றிலைக்கு ஒன்றிய அரசு, புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

2500 ஏக்கர் 100 ஏக்கராக சுருங்கியது…
50 ஆண்டுகளுக்கு முன் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மன்னாடிமங்கலம், தென்கரை, திருவேடகம், தேனூர், முள்ளிப்பள்ளம், இரும்பாடி, தச்சம்பத்து உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்காில் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் செய்து வந்த வெற்றிலை சாகுபடி, தற்போது 100 ஏக்கருக்குள் சுருங்கியுள்ளது. காலத்துக்கு ஏற்ற வகையில் சாகுபடியில் மாற்றங்களை செய்யாததும், தட்பவெப்பம் மாறும் நோய் தாக்குதலும் சாகுபடி பரப்பு குறைந்ததன் காரணமாகும். எனவே, வேளாண் அலுவலர்கள் கொடிக்கால் விவசாயம் செய்யும் பகுதி மண்ணின் தன்மையை ஆய்வு செய்து, அதற்குரிய ஆலோசனை கூறுவதுடன் தேவையான கடன் உதவி மற்றும் காப்பீடு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், புவிசார் குறியீடு கிடைத்தது போல், சோழவந்தானில் தமிழ்நாடு அரசு வெற்றிலை ஆராய்ச்சி மையமும் அமைத்தால் மட்டுமே வெற்றிலை விவசாயம் மேலும் புத்துயிர் பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நோய் தாக்குதலால் குறையும் அறுவடை…
வெற்றிலை கொடிக்கால் விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், ‘வெற்றிலை விவசாயம் மற்ற பயிர்களை போல ஏக்கர் கணக்கில் பயிரிட முடியாது. பராமரிக்கவும் முடியாது. இது ஒரு கூட்டுத்தொழில். ஒரு ஏக்கர் நிலத்தை 3 வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறோம். வெற்றிலை கொடிக்கால் நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவாகும். ஒரு வருடம் கழித்து அறுவடை தொடங்கும். நோய் தாக்குதல் ஏதுமின்றி கொடிக்கால் இருந்தால் மட்டுமே செலவு போக ரூ.2 லட்சம் வரை லாபம் பெறலாம். ஆரம்ப காலங்களில் ஆடு, மாடுகளில் சாணம் போன்ற இயற்கை உரங்கள் மூலம் பயிரிடப்பட்ட போது நோய் தாக்குதல் இல்லாமல் வெற்றிலை அறுவடை 3 வருடங்களுக்கு மேல் இருந்தது. தற்சமயம் செயற்கை உரங்களால் மண்ணின் தன்மை மாறி சத்து குறைவாகி அறுவடை காலம் குறைந்துவிட்டது.

வெற்றிலை சாகுபடி முறை…
வெற்றிலை சாகுபடி செய்ய, பயிரின் காம்புகளை வெட்டி பதியன் போடுகின்றனர். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை நன்கு பயிராகும். நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து, அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி மரங்கள் சுமார் 2 அல்லது 3 அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு அகத்தியைத் தேர்வு செய்துள்ளனர்.

6 வகையாகப் பிரித்து விற்பனை…
வெற்றிலை வியாபாரம் குறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், ‘கொடிக்காலில் பறித்த வெற்றிலைகளை சோழவந்தான் கொடிக்கால் சங்கத்திற்கு கொண்டு வந்து கட்டி, எடை போட்டு, அங்கிருந்துதான் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். விலை நிர்ணயம் அன்றாடம் மாறக்கூடியது. இதற்காக சங்கத்திற்கு ஒரு கிலோவிற்கு 50 பைசா மகிமை (கூலி) கொடுக்கப்படும். வெற்றிலையை 6 வகையாக பிரித்து விற்பனைக்கு அனுப்புவோம். அதாவது 35 நாட்களில் பறிக்கும் வெற்றிலையின் பெயர் சக்கை. இதன் விலை கிலோ ரூ.250. இது உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

25 நாட்களில் பறிக்கும் வெற்றிலையின் பெயர் முட்டி. விலை கிலோ ரூ.200. இது வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 20 நாட்களில் பறிக்கும் வெற்றிலை மாத்து. இதன் விலை ரூ.250. இது உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும். 20 நாட்களில் பறிக்கும் மற்றொரு வெற்றிலை வெள்ளை. இதன் விலை கிலோ ரூ.160. இது உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும். 15 நாட்களில் பறிக்கும் வெற்றிலை சிப்பம். இதன் விலை கிலோ ரூ.100. இது உள்ளூர் வியாபாரங்களுக்கு மட்டும் செல்லும். மேற்கூறியவற்றில் கழித்த வெற்றிலையின் பெயர் சித்து. இதன் விலை கிலோ ரூ.60 ரூபாய். இதுவும் உள்ளூர் வியாபாரங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

The post சோழவந்தான் பகுதியில் புவிசார் குறியீடு கிடைத்தும் வாடி வதங்கும் வெற்றிலை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை வாழை, நெற்பயிர்கள் சேதம்