×

பொத்துமரத்து ஊரணியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்-சிவகாசி மக்கள் கோரிக்கை

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி பொத்துமரத்து ஊரணி ஆக்கிரமிப்பு முழுவதையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர்நிலைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டு வந்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல தெப்பங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டது.

இதனால் சிவகாசியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்படைந்துள்ளது. சிவகாசி மாநகராட்சி சார்பில் பொத்துமரத்து ஊரணி தூர்வார ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மே 20ல் பூமி பூஜை நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஊரணியில் நீர் நிரம்பியது. இதனால் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பொத்துமரத்து ஊரணி முழுவதுமாக தூர்வாரி பூங்கா நடைபாதை, இருக்கைகள், விளக்குகள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. பொத்துமரத்து ஊரணியில் நாரணாபுரம், போஸ்காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது.

கழிவுநீர் கலப்பதை தடுத்து ஊருணியில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொத்துமரத்து ஊரணி சுமார் 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு, வணிக கட்டிடம், கோவில் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணியை மீட்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஊருணி தூர்வாரும் பணியை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டு ஊருணி பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் வருவாய் துறையினர் ஊருணியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் மதியழகன், நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஊருணியின் மேற்கு பகுதியில் இருந்த தனியார் அச்சகம், ஒரு வீடு இடித்து அகற்றப்பட்டது. இதேபோல் தெற்கு பகுதியில் உள்ள கடைகள், வீடுகளை அகற்றினர். அப்போது தனியாருக்கு சொந்தமான கோவிலை வருவாய் துறையினர் அகற்ற முன்வரவில்லை.

இதனால் 100க்கும் மேறபட்ட பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் உறுதி அளித்தனர். ஆனால் அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்றுவதில் வருவாய் துறையினர் இதுவரை எந்த நடவடிக்ைகயும் எடுக்கவில்லை.

பொத்து மரத்து ஊருணி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. ஊருணி நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இரவில் மின் விளக்கு ஒளியில் ஊருணி அழகாக காட்சியளிக்கும். எனவே பொத்துமரத்து ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பு முழுவதையும் அகற்றி மழைநீரை தேக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொத்துமரத்து ஊரணியில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்-சிவகாசி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pottumarathu Pani ,Sivakasi ,Sivakasi Municipal Corporation ,Pottumaratu Pani ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி