×

எடமணல் கிராமத்தில் பருத்தி பயிரில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி

கொள்ளிடம் : பருத்தி பயிரில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி எடமணல் கிராமத்தில் நடந்தது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையினால் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

இதனால் விவசாயிகள் மறு சாகுபடி செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் விவசாயிகள் பருத்தி மற்றும் குறுவை நெல்சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை குறைத்து அதிக அளவில் பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தது. இதை பயன்படுத்தியும், நிலத்தடி நீரை பயன்படுத்தியும் விவசாயிகள் பருத்தி பயிரை பராமரித்து வருகிறனர். கொள்ளிடம் பகுதியில் மட்டும் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம், சீர்காழி பகுதியில் பருத்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பல இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொள்ளிடத்தில் சேர்ந்த பருத்தி விவசாயி ரவிசுந்தரம் கூறுகையில், கடந்த ஆண்டு பருத்தியின் விலை குவிண்டால் பத்தாயிரத்திற்கும் மேல் விற்பனையானது. அதனால் இந்த ஆண்டும் நல்ல விலை போகும் என்று நோக்கில் பருத்தி சாகுபடியில் தீவிரம் காட்டி வந்தோம். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துள்ளது. இது விவசாயிகள் அனைவரிடமும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. நோய் தாக்குதல் காரணமாக பருத்தி செடி காய்ந்து சேதம் அடைந்து வருகிறது. அதிகம் செலவு செய்து விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளோம். இந்த நிலையில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பருத்தி செடிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்த மருந்து அடிக்க ஆட்கள் கிடைக்காதல் ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

பருத்தி பயிரில் தற்போதுள்ள பூச்சி தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்து எப்படி என்பது குறித்த கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா கூறுகையில், முதலில் பருத்தி பயிரில் வறட்சியை தடுப்பதற்கு டைமிக்டோஏட் 30 ஈஸி என்ற மருந்தை ஏக்கருக்கு 400 மிலி வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்ப எண்ணெய் 22 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு ஐந்து சதவீதம் வீதம் தண்ணீரில் கலந்து தெளித்து மாவு பூச்சியை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றார்.

The post எடமணல் கிராமத்தில் பருத்தி பயிரில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Etamandal village ,Edasand ,Mayaladuthurai District ,Madesand ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை 32...