×

கரைமேடு கிராமத்தில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு ஊராட்சியில் பரவனாறு அருகே மயான பகுதியில் நெற்பயிர்களின் நடுவே அடியோடு சாய்ந்தபடி கீழே விழும் நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளன. தற்போது இந்த கம்பங்களில் உள்ள மின்கம்பிகளில் மின் விநியோகம் இல்லை என கூறப்படுகின்றது. இருப்பினும் கவனக்குறைவாக மின்விநியோகம் செய்யப்பட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

பருவமழைக்காலங்களில் பலமான காற்று வீசினால் சாய்ந்துள்ள முன்கம்பங்கள் கீழே விழும் நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இதனருகே தான் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டும் மயான கொட்டகையும் உள்ளதால் சடலத்தை எரியூட்டவரும் கிராம மக்கள், விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாய தினக்கூலி தொழிலாளர்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் கரைமேடு கிராமத்தில் விளைநிலங்களின் நடுவே சாய்ந்துள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரைமேடு கிராமத்தில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karaimedu ,Chethiyathoppu ,Bhuvanagiri ,Cuddalore district ,Paravanaru ,Mayanar ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி