×

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி திரு. அண்ணாமலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது. 1996ல் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தாலும், அவர்கள் ஏற்படுத்திய கடும் நெருக்கடிகளையும் தாண்டி பீனிக்ஸ் பறவையைப் போல் எழுந்து வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதன் தொடர்ச்சியாகவே, 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா அவர்கள் அமைத்த கூட்டணி, தேசிய முக்கியத்துவத்தைப் பெற்றது. மதிப்பிற்குரிய திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும், திரு.அத்வானி அவர்களும் இக்கூட்டணி அமைய பெரும் முயற்றி எடுத்தனர். அதுதற்போதைய பா.ஜ.க மாநில தலைவர் திரு.அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மெரினாக் கடற்கரையில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, அதில் முன்னாள் பாரத பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் கலந்துகொண்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமையைப் பற்றி புகழ்ந்து பேசியதை உலகம் கேட்டது.

தமிழகத்தில் அப்போது பாரதிய ஜனதா கட்சிக்கான வெற்றி வாய்ப்புகளைஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டுமே. அதற்காக கடுமையான பிரசாரங்களை மேற்கோண்டதோடு, அம்மா அவர்கள் அமைத்த அந்த கூட்டணி மக்கள் ஆதரவோடு பெரும் வெற்றியைப் பெற்றுக் காட்டியது. இந்த வரலாறை திரு.அண்ணாமலை தெரிந்திருப்பாரா? மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்குகள் பலவற்றை எதிர்க்கட்சிகள் தொடுத்தது. எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் இதயதெய்வம் அம்மா அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக்கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அம்மா அவர்களே என்பதை திரு.அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.ஏழைகளைத் தேடி அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழகத்திற்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர்அம்மா அவர்கள். அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன.

உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதனால்தான் அன்னை தெரசா உட்படபன்னாட்டுத் தலைவர்களும் அம்மா அவர்களை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர். ஏன், இன்றைய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார். உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இதயதெய்வம் அம்மா அவர்கள். இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி திரு.அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது. தன் பெரும் அறிவைப் பயன்படுத்தி ஊழல் தொடர்பாக கருத்தைக்கூறும் திரு.அண்ணாமலை, அம்மாவின் மறைவிற்கு பிறகு கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கும், அதில் ஊறித்திளைத்த அமைச்சர்களுக்கும் எதிராக மத்திய அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல முடியுமா? கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சொத்து விவரங்களை வெளியிடும் திரு. அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா? வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் திரு.அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.

முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் திரு.அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Anamaram ,Chief Minister ,DTV ,Dinakaran ,Anamalai ,Jayalalithah ,Chennai ,Amadmi General ,Anamaram General Secretary ,Anamalay ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...