×

மகளை பார்க்க ₹10 லட்சம் கொடுக்க வேண்டும் என மணமகன் உறவினர்கள் மிரட்டல் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெண் புகார் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி

வேலூர், ஜூன் 13: காதல் திருமணம் புதுமண தம்பதியில் மகளை பார்க்க வேண்டும் என்றால் ₹10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு மணமகன் உறவினர்கள் மிரட்டுவதாக குறைதீர்வு கூட்டத்தில் பெண் புகார் அளித்தார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் அளித்து கொண்டிருந்தபோது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு முதலுதவி சிகிச்ைச அளித்தனர். விசாரணையில் மயங்கி விழுந்த பெண், காட்பாடி செங்குட்டை பகுதியை சேர்ந்த பாரதி(46) என்பதும், நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘இலவச மின்சாரம் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அமைதி பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 5ம் தேதி வேலூரில் அமைதி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கருகம்பத்தூரை சேர்ந்த யுவஞ்சலின் கொடுத்த மனுவில், எனது மகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு மாணவர், எனது மகளை கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 25ம் தேதி புகார் அளித்தோம்.

அங்கு பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டதால், அவரது விருப்பப்படி செல்லலாம் என கூறிவிட்டனர். தற்போது அந்த மாணவரின் உறவினர் ஒருவர், ₹10 லட்சம் கொடுத்தால் மகளை எங்களுடன் திருப்பி அனுப்பி விடுவதாக கூறுகிறார். ஆனால் எனது மகளை இதுவரை காண்பிக்கவில்லை. எனவே எனது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியூரை சேர்ந்த வேண்டாமணி அளித்த மனு: எனது கணவர் பெயர் குமரன். எங்களுக்கு 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. 7வயதில் மகன் உள்ளான். குடும்ப தகராறு காரணமாக எங்களுக்கு இடையே கருத்துவேறுபாடு உள்ளது. கடந்த 1ம்ததி எனது கணவர், எனக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் ேபாலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 2வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகள் 2 பேருக்கு தலா ₹1 லட்சம், இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு செய்ய 5 பேருக்கு ₹17 ஆயிரம், ₹1.6லட்சம் மதிப்பில் பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் 5பேருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 16 பேருக்கு ₹8.22லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

அதேபோல் மாநில அளவில் நடந்த கிக் பாக்சிங் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகள் மற்றும் அதிகளவு மரக்கன்றுகளை நட்டவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். வேலூர் மாவட்ட தமாகா தலைவர் மூர்த்தி அளித்த மனுவில், ‘வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். என்பதால் மின்கட்டணத்தை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

The post மகளை பார்க்க ₹10 லட்சம் கொடுக்க வேண்டும் என மணமகன் உறவினர்கள் மிரட்டல் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெண் புகார் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி appeared first on Dinakaran.

Tags : Groom ,Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...