×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பதில் மக்களின் முடிவு அடிப்படையில்தான் தமிழக அரசு செயல்படும்

விழுப்புரம், ஜூன் 13: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் மக்களின் முடிவு அடிப்படையில்தான் தமிழக அரசு செயல்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு தலைமை தாங்கினார். சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாதது, அனுமதி பெறாமல் இயங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 89 காப்பகங்கள் (முதியோர், குழந்தை இல்லங்கள்) மூடப்பட்டன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, காவல்துறை சார்பில் வேகமாகவும், விரைந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடப் பணி நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்திருப்பது, எப்படி என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில், மக்களுடைய முடிவு அடிப்படையில்தான், தமிழக அரசின் நிலைப்பாடும் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பக் காலத்தில் ராமாயணம், மகாபாரதம் படித்தால் அவர்களுக்கு பிரசவம் எளிதாக இருக்கும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது, என்றார்.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பதில் மக்களின் முடிவு அடிப்படையில்தான் தமிழக அரசு செயல்படும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Villupuram ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...