×

4.53 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ ராகி

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்தில் 4.53 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ ராகி வழங்கும் திட்டத்தை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், 451 பேருக்கு ₹3.44 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ரேஷன் கடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி (கேழ்வரகு) விநியோகம் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராம், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மேலாண்மை இயக்குநர் பிரபாகர், வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனர். விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர், 451 பயனாளிகளுக்கு ₹3.44 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், பொது விநியோக திட்டத்தின் கீழ், 2கிலோ அரிசிக்கு பதிலாக, 2 கிலோ ராகி வழங்க ஏதுவாக, நேரடி ராகி கொள்முதல் நிலையம், கடந்த ஜனவரி 21ம் தேதி தர்மபுரி, அரூர் மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை, 32 டன் ராகி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1082 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது 4 லட்சத்து 68 ஆயிரத்து 320 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ராகி (கேழ்வரகு) பெற தகுதி பெறும் குடும்ப அட்டைகள் 4 லட்சத்து 53 ஆயிரத்து 679 ஆகும்.

தற்போது அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கேழ்வரகு (அரிசி உரிமைக்கு பதிலாக) என மொத்தம் 20 கிலோ உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ், ராகி விநியோகம் செய்ய மாதம் 930 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மொத்தம் 11,160 டன் ராகி தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். விழாவில், டிஆர்ஓ அனிதா, நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் தடங்கம் சுப்ரமணி, மனோகரன், முன்னாள் எம்பி சேகர், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விஜயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post 4.53 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ ராகி appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Darmapuri district ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...