×

உலகத்தையே விரல் நுனியில் எண்ணுவார் பிரதமராகும் வாய்ப்பு எடப்பாடிக்குதான்: பொன்னையனின் மெய் மறந்த பேட்டி

சென்னை: ‘உலகத்தையே விரல் நுனியில் எண்ணுவார். பிரதமராகும் வாய்ப்பு எடப்பாடிக்குதான் உள்ளது’ என்று அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் மெய் மறந்து பேட்டி அளித்து உள்ளார். தமிழகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேலூரில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘வருங்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்’ என்றார். இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக டெல்லிக்கு செல்லக்கூடிய தகுதியானவர்கள் இருக்க வேண்டும் அல்லவா? அனைத்து தகுதிகளையும் மிக்கவர், ஆங்கிலம் ஞானம், பொருளாதார ஞானம் மிக்கவர், உலக அரசியல், இந்திய அரசியலை தெரிந்தவர், மற்றும் விரல் நுணியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர், நான்கரை ஆண்டு அற்புதமான ஆட்சி செய்தவர் என்று அகில இந்தியாவே பாராட்டப் பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு தான் அப்படி ஒரு வாய்ப்பு வரும் சூழல் உருவாகும் என்று நம்பிக்கை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மையின் அடிப்படையில், ஆதாரத்தின் அடிப்படையில் கூறிய கூற்று.

வேறு மதத்தில் இருப்பதால் இந்த மண்ணிலே இருக்கக் கூடாது என்று வெறி உணர்வோடு இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுகிற காரணத்தால் அந்த விழிப்புணர்வு தமிழக மக்களிடம் அதிகம் உள்ளதால் பழமை கொள்கையோடு ஜாதி, மத உணர்வோடு மக்களை பாஜ பிரிக்கிறது என்ற எண்ணம் எல்லாருடைய மத்தியிலும் உள்ளது. பாஜவை இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மட்டும் வெறுக்கவில்லை. இளைஞர்கள் படித்து விட்டார்கள் மத துவேசத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று வெறுப்பு இருக்கிறது. அது தான் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மோடியா?, லேடியா? என்று கேட்டபோது அமோக வெற்றி பெற்றோம். பாஜவுடன் இணைந்து செல்லும் போது முஸ்லீம், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுடைய ஓட்டுகளில் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பின் பாதிப்பை அதிமுக சந்திக்கிறது. உங்களுடைய கொள்கையை மாற்றுங்கள் என்று பாஜவிடம் வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம். இவ்வாறு பொன்னையன் கூறினார்.

The post உலகத்தையே விரல் நுனியில் எண்ணுவார் பிரதமராகும் வாய்ப்பு எடப்பாடிக்குதான்: பொன்னையனின் மெய் மறந்த பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Ponnaiyan ,Chennai ,AIADMK ,Ponnaiyan Mei ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...