×

ம.பி.யில் 220 மாதத்தில் 225 ஊழல் 3 ஆண்டு பா.ஜ ஆட்சியில் வெறும் 21 பேருக்குத்தான் அரசு வேலை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா குற்றச்சாட்டு

ஜபல்பூர்: ம.பி.யில் பாஜவின் மூன்றாண்டு ஆட்சியில் வெறும் 21 பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் பிரசாரம் நேற்று தொடங்கியது. இதற்காக பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஜபல்பூர் வந்தார். ஜபல்பூரில் நர்மதா நதியில் பூஜை செய்து வழிபாடு நடத்திய பின்னர் நடந்த கட்சி பேரணியில் கலந்து கொண்டு பிரியங்கா பேசியதாவது: மபி.யில் பாஜவின் ஆட்சியில் வியாபம் என்ற தேர்வாணைய ஊழல், ரேஷன் வினியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன.

ம.பி. பாஜ அரசு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புதிய ஊழலில் ஈடுபடுகிறது. அந்த கட்சியின் 18 ஆண்டு ஆட்சியில், அதாவது 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள் நடந்துள்ளன. குறிப்பாக கடந்த 3 ஆண்டு ஆட்சியில் 21 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. நான் இது பற்றி என்னுடைய அலுவலகத்துக்கு இணையதளத்தில் சரி பார்த்த போது அது உண்மை என தெரியவந்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு கடவுள்களையும் விட்டு வைக்கவில்லை. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசுகள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. கர்நாடகாவில் எங்கள் அரசு 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

* சிந்தியா மீது தாக்கு
ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பா.ஜ ஆட்சி அமைய காரணமான ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவையும் பிரியங்கா விடவில்லை. அவரது பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் கூறும்போது,’ மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டு விட்டனர். பண பலத்தின் அடிப்படையில், பாஜவுடன் இணைந்து மக்கள் ஆணையை வீழ்த்தினர். பாஜ ஆட்சியில் இருக்க எதையும் செய்யும்’ என்றார்.

The post ம.பி.யில் 220 மாதத்தில் 225 ஊழல் 3 ஆண்டு பா.ஜ ஆட்சியில் வெறும் 21 பேருக்குத்தான் அரசு வேலை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Priyanka ,Jabalpur ,Priyanka Gandhi ,
× RELATED சொல்லிட்டாங்க…