×

மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வலிமையான முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி

திருவள்ளூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திருவள்ளூர் அடுத்த பூண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்பிறகு அவர், நிருபர்களிடம் கூறியதாவது; வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றுவோம், பிரதமரை உருவாக்குவோம் என்பது அனைத்தும் ஏமாற்று சொற்கள். மோசடி முயற்சி. இதனை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றவேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அது தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும்.

கர்நாடக மாநிலத்தில் பல சித்து வேலைகளை செய்து பிரதமர் மோடி 9 முறை கர்நாடகாவில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். ஆனாலும் பாஜக படுதோல்வி அடைந்தது. கர்நாடகா இந்துக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளாதபோது பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் சித்து வேலை எடுபடாது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. திமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடருவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறுப்பு அரசியலை விதைப்பது, மதவெறியை தூண்டுவது மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவது போன்றவற்றில் 24 மணி நேரமும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

சன்னியாசிகளை வைத்து யாகம் செய், புனித பசுவை பாதுகாப்போம் என முழக்கம் இடுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதற்கு ஒடிசா ரயில் கோர விபத்து சான்றாக விளங்குகிறது.

திமுகவின் கொள்கையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும்ஒன்று தான். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை சார்ந்து இயங்குகிறது என்பதை மதவெறி அரசியல் செய்பவர்களால் புரிந்துகொள்ள இயலாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்வீரர், சாதனையாளர்.

அவரை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் செயல் திட்டங்களை தீட்டி வருகின்றனர். முன்மாதிரி ஆட்சி நிர்வாகத்தை வழங்குகின்ற வலிமை பெற்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நான் பரீட்சை நேரத்தில் படிக்கின்ற மாணவனை போல தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றியும் தொகுதிகளை பற்றியும் சிந்திப்பேன்.இவ்வாறு கூறினார்.

The post மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வலிமையான முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Chief Minister ,Thol.Thirumavalavan ,Thiruvallur ,Liberation Tigers Party ,Thirumavalavan ,Bundi ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...