×

‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதிக நம்பிக்கை’’; ஓராயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழக மக்களை அசைக்க முடியாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் ஓராயிரம் அமித்ஷாக்கள் தமிழகம் வந்தாலும் அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை திருவிக.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலை மேம்பால பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவிக. நகர் எம்எல்ஏ தாயகம் கவி உள்பட பலர் இருந்தனர்.

இதன்பிறகு அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொருத்தவரை மழைக்கால தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கான வசதி, அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள் என்று எதையும் திட்டமிடாமல் கடந்த ஆட்சி காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த பணிகளில் எல்லாம் கவனம் செலுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேருந்து நிலையத்தை சுற்றி சாலை வசதிகள், மழைநீர் தேங்காாமல் இருக்க கால்வாய் வசதிகள், பொழுதுபோக்கு பூங்கா வசதிகள், மருத்துவ மையம், காவல் மையம், ஆம்னி பேருந்து நிலையத்துக்கு தனியாக இடம் தேர்வு செய்து 5 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு இடம் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

தமிழகத்தில் முதலில் பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடட்டும். அப்படி போட்டியிட்டாலும் தேர்தலுக்கான முன்வைப்பு தொகையை தக்க வைக்கவே பாஜக போராடுவார்கள். ஒரு அமித்ஷா இல்லை, ஓராயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வாக்கையும் முதல்வர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் தமிழக மக்களையும் அசைத்து பார்க்க முடியாது. இரண்டு தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்ததாக அமித்ஷா கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ‘’தமிழக முதல்வரும் தமிழர் தானே’’ என்று சேகர்பாபு கூறினார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் மேயர் பிரியா கூறும்போது, ‘’ஸ்டீபன்சன் சாலை மேம்பாலம் 66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. சிறு சிறு பணிகள் தான் மீதம் உள்ளது. அந்த பணிகள் 7 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு விரைவில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் பருவமழை பணிகளை முடித்துவிடுவோம்’ என்றார்.இந்த நிகழ்ச்சியில், 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள், திருவிக. நகர் மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதிக நம்பிக்கை’’; ஓராயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழக மக்களை அசைக்க முடியாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Minister ,PK Shekharbabu ,Perambur ,Amit Shahs ,Amitshahs ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு