டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 6-வது முறையாக போட்டியிட போவதாக பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் மக்களவை தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட போவதாக பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாக உள்ளது. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்தால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம் என்று வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பிரிஜ் பூஷண் பேசியதாவது: நாடு முழுவதும் தரமான சாலைகள், மருத்துவக் கல்லூரிகள், ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்தது என பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, வரும் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நான் மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிஜ் பூஷண் 6-வது முறையாக தாம் எம்.பி. பதவிக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட போவதாக கூறியுள்ளதால் வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post நாடாளுமன்ற தேர்தலில் 6-வது முறையாக போட்டியிடுவேன்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷண் சிங் திட்டவட்டம் appeared first on Dinakaran.
