×

காவிரி நீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும்: மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: காவிரி திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்:

1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 19 நாட்களுக்கு முன்னரே மே 24 அன்றே டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும். கோடை மழையால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக அதிகரித்தது. கால்வாய் தூர்வாரும் பணிக்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன என்று முதலமைச்சர் கூறினார்.

நெல் உற்பத்தியில் கடந்த ஆண்டு சாதனை:

கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடி 48 ஆண்டுகளில் இல்லாத 5.36 லட்சம் ஏக்கரில் 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். மேட்டூர் அணையின் நீர்மட்டம்-103.35 அடி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 867 கனஅடியாக உள்ளது. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்”

கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 23 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயன் பெற்று வருகின்றனர். வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேட்டூர் அணை திறப்பு:

குறுவை பருவத்திற்கு தேவையான இடுபொருட்களை திமுக அரசு உரிய நேரத்தில் வழங்கியது. திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மேட்டூர் அணையில் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உள்ளது என்று கூறினார்.

” 2 ஆண்டுகளில் குறுவை சாகுபடி அதிகரிப்பு”

கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய நேரத்தில் நீர் திறப்பதன் மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது.

ரூ.75.95 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு திட்டம் அறிவிப்பு:

ரூ.75.95 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நடப்பாண்டு 5 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி அதிகரிக்கும் என நம்புகிறேன். காவிரி நீரை திறம்பட செயல்படுத்தி, குறுவை சாகுபடி அதிகரிக்க குறுவை நெல் சாகுபடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1.6 லட்சம் ஏக்கரில் இதுவரை குறுவை நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3வது ஆண்டாக மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி அதிகரிக்க செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை:

சில நாட்களுக்கு முன், டெல்டா பாசன கால்வாய் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தோம். குறுவை சாகுபடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரக விதைகள், உரங்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த திட்டமும் முடக்கப்படவில்லை:

முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர் பெற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சில திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த திட்டமும் முடக்கப்படவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்து தற்போது வரை அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை:

பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழரை பிரதமராக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று பட்டியலிட்டுள்ளோம். நாங்கள் கொடுத்த பட்டியலை முழுமையாக படிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

நான் கேட்ட கேள்விக்கு அமித்ஷா பதில் தரவில்லை:

பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சியில் எந்த சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பா.ஜ.க.வின் 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்று கேள்வி கேட்டேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள்:

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஆட்சியில்தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து போன்றவை கொண்டு வரப்பட்டது. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் வந்தது. சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் வந்தது. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வந்தது.

தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் கொண்டுவரப்பட்டது. கரூர், ஈரோடு, சேலத்தில் ரூ.400 கோடியில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் அமைந்தது. நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர் திட்டம், சென்னை அருகே கடல் சார் தேசிய திட்டம் கொண்டுவரப்பட்டது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டுக்கு குறைந்த நிதி தருகிறது ஒன்றிய அரசு:

ஜி.எஸ்.டி. நிதியை ஒன்றிய அரசுக்கு அதிகமாக கொடுத்து வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்குத்தான் ஒன்றிய அரசு நிதி வழங்குவது குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிகமாக நிதி வழங்குகிறது என்று கூறினார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் தேவைப்படவில்லை:

திமுக ஆட்சியில் இருந்தவரை எய்ம்ஸ் என்ற ஒன்றே தேவைப்படவில்லை, மருத்துவ சேவை தரமாக இருந்தது. மதுரையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தது ஒன்றிய அரசு, அதனால்தான் என்ன ஆனது என்று கேள்வி கேட்டேன் என்று முதலமைச்சர் கூறினார்.

 

 

 

 

The post காவிரி நீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் உழவர்கள் செயல்பட வேண்டும்: மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Open Mattur ,Dam ,Chief Minister ,CM. ,G.K. Stalin ,Salem ,Open Mattur Dam ,B.C. ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...