×

காஷ்மீரில் இருந்து வீடியோவில் டிஜிபிக்கு ராணுவ வீரர் கோரிக்கை 2 பேர் கைது

கண்ணமங்கலம், ஜூன் 12: மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் வீடியோ மூலம் டிஜிபிக்கு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(41). இவர், படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருந்துள்ளார். பின்னர், அந்த கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, படவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் மனைவி கீர்த்தி(28) என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கடையை காலி செய்வது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராணுவ வீரர் மனைவி கீர்த்திக்கு ஆதரவாக அவரது அண்ணன்கள் உதயா ஜீவா ஆகியோர் ராமுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், ராமுக்கு ஆதரவாக அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் கீர்த்தியை தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமு, கீர்த்தி ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கீர்த்தி தெரிவித்த புகாரின்பேரில் ரத்தினபுரி கிராமத்தை சேர்ந்த ராமு, அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் மீதும், ராமு அளித்த புகாரின்பேரில் கீர்த்தி, ஜீவா, உதயா ஆகியோர் மீதும் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, செல்வராஜ்(56) அரிகரன்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீர்த்திக்கும், படவேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கீர்த்தியின் கணவர் ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். படவேடு கோயில் அருகே கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி, என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்பி அலுவலக அறிக்கையில் கூறியிருப்பதாவது:
படவேடு கோயில் அருகே வாடகை கடை தகராறில் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார். அப்போது, ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து, ஒப்பந்தப்படி கடையை காலி செய்ய மறுத்துள்ளீர்கள். கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள்.

மேலும், பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர, கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்து. இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் இருந்து வீடியோவில் டிஜிபிக்கு ராணுவ வீரர் கோரிக்கை 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : DGP ,Kashmir ,Kannamangalam ,Army ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு