×

களக்காடு அருகே முறையான பராமரிப்பின்றி புதர்மண்டிய பச்சையாறு

நெல்லை, ஜூன் 12: களக்காடு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பச்சையாறு, சுமார் 32 கிமீ தொலைவுக்கு பாய்ந்தோடி முன்னீர்பள்ளம் அடுத்த தருவை பகுதியில் வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிபரணி ஆற்றில் கலக்கிறது. பாரம்பரியமிக்க பச்சையாறானது பத்மனேரி, தேவநல்லூர், காடுவெட்டி, சிங்கிகுளம், ஓமநல்லூர் உள்ளிட்ட 120 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் நிலத்தடி நீரின் ஆதாரமாகவும் விளங்கிவரும் பச்சையாற்றை நம்பியுள்ள விவசாயிகள், நெல், வாழை, பருத்தி, உளுந்து பயிர் சாகுபடி செய்கின்றனர்.

இந்த பச்சையாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு பச்சையாற்றில் அணைக்கட்டிய பிறகு பச்சையாற்றில் தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்தது. மழை காலத்தில் மட்டும் பச்சையாற்றில் ஆர்ப்பரித்தும் ஓடும் தண்ணீரானது தருவை பகுதியில் தாமிபரணி ஆற்றில் சங்கமிக்கிறது. அதே வேளையில் மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இன்றி பச்சையாறு பரிதாபமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக பச்சையாற்றில் தண்ணீர் இல்லாததாலும், முறையாக பராமரிப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தாலும் வேலி காத்தான், வேலி கருவை, முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி பச்சையாறு காணப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டிட இடிபாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தருவை பகுதியில் பச்சையாறு என்ற ஒரு ஆறு இருந்த தடம் கூட தெரியாத நிலை உள்ளது.

இருப்பினும் அம்பை சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை வைத்துதான் பச்சையாறு உள்ளதற்கான அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டிய பரிதாபநிலை உள்ளதாக பச்சையாற்று பாசன விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறுகையில் ‘‘களக்காடு அருகே பச்சையாறு பகுதியில் தண்ணீர் இன்றி காடுபோல் காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் பச்சையாறு தடம் தெரியாமல் போனது. தற்போது கருவேல மரும், வேலி கருவை, முட்செடிகள் வளர்ந்து பச்சையாறு புதர் மண்டிக் கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பாரம்பரியமிக் பச்சையாற்றை தூர் வாரி சீரமைத்து பாதுகாக்க முன்வரவேண்டும். ஆற்றை தூர்வாருவதோடு சீமைகருவேல மரங்களை அகற்றி தண்ணீர் வரும் வழிகளை சீரமைக்கத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு நெல்லை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் ஆவன செய்ய வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.

The post களக்காடு அருகே முறையான பராமரிப்பின்றி புதர்மண்டிய பச்சையாறு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Nellai ,Western Ghats ,Munneerpallam ,
× RELATED வனத்துறையினருக்கு ரூட் போட்டு...