×

சேத்தியாத்தோப்பில் பரபரப்பு: அரசு, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்

சேத்தியாத்தோப்பு, ஜூன் 12: சேத்தியாத்தோப்பில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றது. சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு, இருசக்கர வாகனம் விற்பனையகம் அருகே சென்றபோது, எதிர்திசையில், சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து வந்தது. இதில், எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்துகளின் முன்பக்கமும் நொறுங்கியது.

இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்தனர். மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்தில் வந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் லேசான காயங்கள் இருந்ததால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்தின் ஸ்டியரிங் ராடு கட்டானதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதும் தெரியவந்தது.

The post சேத்தியாத்தோப்பில் பரபரப்பு: அரசு, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Chetiathope ,Chennai-Kumbakonam National Highway ,Chidambaram ,Vriddhachalam ,Chetiyathope ,
× RELATED மேலைச் சிதம்பரம்