×

என் குப்பை என் பொறுப்பு என்ற நிலையை உணர்ந்து குப்பை கொட்டுவதின் மூலம் சுகாதாரம் பாதுகாக்கப்படும்

 

ஊட்டி, ஜூன் 12: ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட தலைக்குந்தா பகுதியில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்ற மாபெரும் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்ததால் தான் முழு சுகாதாரத்துடன் இருக்க முடியும் என்பதை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் தலைக்குந்தா பகுதியில் சுமார் 100 பேர் பங்கேற்ற தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தூய்மையினை கடைபிடித்தால் மட்டுமே எவ்வித நோய் தொற்றுக்கும் ஆட்படாமல் சுகாதார வாழ்வினை வாழ்ந்திட முடியும். பொதுஇடங்கள், சுற்றுலா தலங்கள், கோயில் வளாகங்கள் ஆகியவற்றிற்கு செல்லும் போது மக்கள் தங்கள் பயன்படுத்த கூடிய குப்பைகளை என் குப்பை என் பொறுப்பு என்ற நிலையை உணர்ந்து ஒவ்வொருவரும் குப்பைகளை போடுவதற்கு என்று உள்ள இடங்களில் குப்பைகளை கொட்டுவதின் மூலம் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் குப்பைகளை தரம் பிரித்து வைப்பதுடன், தங்கள் பகுதி தூய்மை பணியாளர்களிடம் வழங்குவதால் அக்குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்வதுடன், சுற்றுப்புறத்தினை பாதுகாக்க முடியும், என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா, ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post என் குப்பை என் பொறுப்பு என்ற நிலையை உணர்ந்து குப்பை கொட்டுவதின் மூலம் சுகாதாரம் பாதுகாக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Panchayat Union ,Thalikunda ,Ullathi Panchayat ,Self Help Committee ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...