×

தமிழ்நாட்டின் தலைநகர் விரிவாக்கம் ‘மூன்றாம் முழுமை திட்டம்’ பணிகள் மும்முரம்: பருவநிலை மாறுதலுக்கேற்ப திட்டம் வடிவமைப்பு

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் தொழில் நகரமயமாகி வருகிறது. அத்துடன் நகரமயமாக்கல் திட்டத்தின் மூலம் பெரிய மக்கள் தொகை நகராக சென்னை மற்றும் சுற்றிலும் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் விரிவாக்க பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை தொழில் நகரங்களாக வார்த்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கினாலும், தற்போதுதான் சென்னை தாண்டிய பெரிய அளவிலான விரிவாக்கம் என்ற எல்லையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. தலைநகரை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் அதை சுற்றியுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் பகுதிகளை தொழில் நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கொண்டு தமிழக அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 1976ம் ஆண்டு முதல் முழுமை திட்டம் (1976-96) தயாரிக்கப்பட்டது. அதன்மூலம் சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தவும், நகரத்தின் நெரிசலை குறைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த முதலாம் முழுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக இரண்டாம் முழுமை திட்டம் (2006-26) தயாரிக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. அதன்படி, இரண்டாம் முழுமை திட்டமானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் ஒழுங்குப்படுத்தப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளை கண்டறிந்து அவற்றை சுற்றியுள்ள அடர்த்தியை கட்டுப்படுத்த வரையறுக்கப்பட்ட வளர்ச்சி மண்டலங்களாக அறிவித்தது.

மேலும், ஊக்க தளப்பரப்பு குறியீடு, மாற்றத்தக்க இட ஒதுக்கீடு மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் போன்ற பல்வேறு மேம்பாட்டு விதிமுறைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன. அதன்படி, இரண்டாம் முழுமை திட்டத்திற்கான கால வரம்பு 2026ம் ஆண்டு முடிவடைவதால், மூன்றாம் முழுமை திட்டத்திற்கான (2026-46) ஆயத்த பணிகளை சி.எம்.டி.ஏ தொடங்கியுள்ளது. அந்தவகையில் உலக வங்கியின் நிதி உதவியோடு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு மூன்றாம் முழுமை திட்டம் பற்றிய ஆய்வுகள் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், பொருளாதார மேம்பாடு, நகரப்புற வீட்டு வசதி, சமூக உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை, பாலின சமத்துவம், மரபு மற்றும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பம் நகரப்புற உட்கட்டமைப்பு போன்ற சேவைகள் மூன்றாம் முழுமை திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய துறைகளாக விளங்குகின்றன. 2027-46ம் ஆண்டிற்கான மூன்றா முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவனம் தயாரித்தல் குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இந்த ஆய்வின் கீழ் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், மெரினா கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக வளாகங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், இணையத்தள வாயிலாகவும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்துகளை மையமாக கொண்டு தொலைநோக்கு ஆவண தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில், மூன்றாம் முழுமை திட்டத்தின் ஒரு அங்கமாக பசுமை சார்ந்த திட்டமிடலுக்கு உதவும் வகையில் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்துடன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, இந்த முழுமை திட்டம் மற்றும் நகர திட்டமிடலில் முக்கிய துறைகளாக இயற்கையை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்படும் தீர்வுகள் நீர் வழி மற்றும் பசுமை வழியிலான உட்கட்டமைப்புகள் பருவநிலை மாறுதலுக்கேற்றவாறு தேவையான திட்டமிடல்களை முன்னெடுக்க இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இதன் மூலம் சென்னையை பசுமையாகவும், இயற்கை பாதுகாப்புடன் உருவாக்க முடியும்.

இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அன்னபூர்ணா வாஞ்சீஸ்வரன் கூறுகையில்:
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரங்களில் எங்களது நிறுவனம் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை செய்து வருகிறது. அதேபோல நிலம் மறுசீரமைப்பு, நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்றவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. அந்தவகையில், இந்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வெள்ள தடுப்பு, காற்று தரம், பூங்கா பராமரிப்பு, சமூக இணைப்புகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். சென்னையை பசுமையாக்கும் திட்டத்தை அறிவியல் பூர்வமாக உருவாக்க இருக்கிறோம். அதன்படி, இம்மாதம் இறுதிக்குள் இப்பணிகளை தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமூக ஆர்வலர் வெனிசா பீட்டர் கூறுகையில், ‘‘தொழில் வளர்ச்சியோ, நகர விரிவாக்கமோ அதன் முதல்படியாக இருக்கப்போவது ரியல் எஸ்டேட் புரோக்கரேஜ்தான். புதிதாக விரிவாக்கத்தை தொடங்கும் போது அதனை ஏற்கும் நிலையில் மக்கள் உள்ளார்களா என்பதை அரசு முதலில் பார்க்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
சென்னையை விரிவாக்கம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திகழ்கின்றன. இந்த விரிவாக்கம் என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் வருவதால் சரியான சாலை இணைப்புகள், போக்குவரத்து வசதிகள் மூலமாக புதிய தொழில் நகரங்களை உருவாக்க முடியும். ஸ்ரீபெரம்பத்தூர் தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் முனையமாக செயல்படுகிறது. அந்தவகையில் வளர்ச்சி மிகுந்த இடங்களை தேர்வு செய்கிறோம். அதேபோல, சென்னைக்கு தற்போதைய சூழலில் ஜவுளி நகரம், தொழிற்பேட்டைகள் தேவைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

அதன்படி, இந்த விரிவாக்கம் மூலமாக தொழில் வளர்ச்சிக்கான அனைத்து விதமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மறைமலைநகர் உருவாக்கிய பின், மகேந்திர சிட்டி, கூடுவாஞ்சேரி பகுதிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னை அதிக வளர்ச்சியடைந்த மாவட்டமாகவும், விரிவாக்கத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல இடங்கள் இன்னும் ஊரக தன்மையுடன் இருப்பதாக கூறுவது தவறு. சென்னையிலேயே கொட்டூர்புரம், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை சிறிய வீடுகளும் உள்ளன. அவைகளையும் மேம்படுத்த கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மாமல்லபுரம், ஸ்ரீபெரம்பத்தூரில் துணைகோள் நகரங்கள் திட்டமிடுதலின்படி உருவாக்கி வருகிறோம். சென்னை விரிவாக்கம் தொடர்பாக அமைச்சரின் அறிவுரைகளின்படி, பொதுமக்களிடம் கருத்துகளை இணையவழி வாயிலாகவும், நேரடியாகவும் கேட்டு வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டின் தலைநகர் விரிவாக்கம் ‘மூன்றாம் முழுமை திட்டம்’ பணிகள் மும்முரம்: பருவநிலை மாறுதலுக்கேற்ப திட்டம் வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : Mumburam ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...