×

தாமரை தலைவரின் பேச்சால் அப்செட் ஆன சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை தலைவரின் பேச்சால் அப்செட்டாகி இருக்காரமே சேலம்காரர்…” என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியின் முக்கிய லீடரு, சென்னையில் நடத்திய ஆலோசனையால் சேலத்துக்காரரு பயங்கர அப்செட்டில் இருந்தார். தேனிக்காரரையும், சின்னமம்மியையும், குக்கர்காரரையும் ேசர்த்துக்கிட்டு வாங்கன்னு தாமரை மேலிடம் போட்ட கண்டிஷன் தான் சேலம்காரரின் டென்ஷனுக்கு காரணம். இந்நிலையில் தாமரையின் முக்கிய லீடரு, தலைநகரில் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினாராம். அதற்கு முன்னதாக சேலத்துக்காரரை அவரு சந்திப்பாரு, எத்தனை சீட்டு என்பது உறுதியாகிவிடும். இதனால ஓராண்டுக்குள் நமக்கான தொகுதியை தேர்வு செய்து தேர்தல் பணியை துவங்கிவிட வேண்டும் என்று பேசப்பட்டதாம். இந்த விஷயம் காரணமா அல்லது வேறு தனிப்பட்ட விஷயம் காரணமா என்று தெரியவில்லையாம். இதனால் சேலம்காரர்-டெல்லி அமைச்சரின் சந்திப்பு திடீரென ரத்தானதாம். இது ஒரு புறமிருக்க, தாமரை லீடரின் பேச்சை சொந்த ஊரில் இருந்தாலும் சேலத்துக்காரரு உன்னிப்பாக கேட்டுக்கிட்டே இருந்தாராம். இதில் 9 தொகுதியில் போட்டியிடுவோம் என்ற அறிவிப்பை கேட்டதும் பயங்கர அப்செட்டாம். இத்தனை தொகுதி என்று நிர்ணயிக்க இவங்க யாரு… ஓபனாக எப்படி பேசலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இலை கட்சி தலைமையில தான் கூட்டணி. இதை உணராமல் தாமரை தலைவரு ஒன்பது தொகுதியின்னு பேசியிருக்காரு. இதனால அப்செட்டில் இருந்த சேலம்காரர், டெல்லிக்காரர் போனவுடன் நான் பார்த்து கொள்கிறேன் என்று சவால்விட்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பால் ஊழியர்கள் கலக்கத்தில் இருக்காங்களாமே…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் ஆவின் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்களை இயக்கி தினமும் 2,500 லிட்டர் வரை பால் திருடி இருக்காங்க. ஆர்டிஓ அதிகாரிகள் ஆய்வில் இந்த விவகாரம் தெரிந்ததும் 2 வாகனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த 2 வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முயன்றாங்க. அதிகாரிக்கு மிரட்டலும் விடுத்தாங்க. இதுகுறித்து சத்தான காவல் நிலையத்துல புகாரும் தெரிவிச்சிருக்காங்க. இதுக்கிடையில பால் திருட்டு விவகாரத்துல, செக்யூரிட்டி நிறுவனத்துக்கு நோட்டீஸ் போயிருக்காம். ஆவின் பால் வினியோக பிரிவு செயல் அலுவலர்கள் 6 பேருக்கு டிரா ன்ஸ்பராம். மேலும் 8 துறைத்தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்காம். இந்த விவகாரத்துல அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால, அடுத்து யாரு மேல நடவடிக்கை பாயுமோ என பலரும் கலக்கத்தில் உள்ளார்களாம், வேலூர் ஆவின் ஊழியர்களும் அதிகாரிகளும்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி முக்கியஸ்தர் மேல கட்சிக்காரங்க கோபத்துல இருக்காங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் இலை கட்சி சார்பில் மதுரை எம்.பி தொகுதியில் தனது மகனை நிறுத்த, சேலத்துக்காரரை சீண்டி சீட்டு வாங்கினார் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரான செல்லமான எம்எல்ஏ. பணமும் செல்வாக்கும் கைவிட்ட நிலையில், வாரிசு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தலையில் துண்டை போட்டு தோல்வி அடைந்தாராம். வாரிசு துவண்டு விடக்கூடாது என்பதற்காக, இலை கட்சியில், ஐடிவிங்கில், பதவி வாங்கிக்கொடுத்தார். இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் எம்.பி தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டால், மீண்டும் மண்ணை கவ்வி விடுவோம் எனக்கருதி, அவர் குடியிருக்கும் வீடு சார்ந்த, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்றத்தொகுதி அடங்கிய, விருதுநகர் எம்பி தொகுதியில் நிறுத்த செல்லமானவர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் வாரிசுடன் சென்று களப்பணிகளையும் துவக்கி விட்டாராம்.
ஆனால், மதுரையில் இருந்து இங்கு வந்து போட்டியிடுவதா, நாங்கள் எல்லாம் வேட்பாளராக தெரியவில்லையா என விருதுநகர் இலைக்கட்சியினர் தலைமைக்கு இப்போதே பெட்டிஷன் போட ஆரம்பிச்சுட்டாங்களாம். விருதுநகர் தொகுதிக்கு, இந்த மாவட்டத்தை சேர்ந்தவருக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும். வெளிமாவட்ட கட்சியினருக்கு சீட் கொடுக்க கூடாது என உள்ளூர் இலைக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பை காட்டி வர்றாங்க. இதனை கண்டுகொள்ளாத செல்லமானவர், சேலத்துக்காரர் ஆதரவுடன் அல்லது சேலத்துக்காரர் மகன் மூலம் எப்படியும் தனது வாரிசுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.. இதை தான் தந்தை மகனுக்கு செய்யும் உதவின்னு சொல்வாங்களோ…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி துறை சேதி என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள ஸ்டேஷனில் பணியாற்றி வந்த காக்கி அதிகாரி சமீபத்தில் இடமாறுதலாகி போனாராம். அந்த ஸ்டேஷனில் பணியாற்றி வரும் இன்னொரு காக்கி அதிகாரி தன்னை உயரதிகாரியாக நினைத்து செயல்படுகிறாராம். புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார். சக காக்கிகளையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார். மன்னர் மாவட்டத்தில் தங்கியுள்ள பக்கத்து மாவட்டமான வருவாய்த்துறையில் உள்ள ஆர்டிஓ, பர்சனல் விஷயமாக புகார் கொடுக்க ஸ்டேஷன் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த சின்ன காக்கி அதிகாரி, ஆர்டிஓவுக்கு மரியாதை கொடுக்காமல் அவரை அங்கும் இங்கும் அலைக்கழித்தாராம். அப்புறம் ஸ்டேஷனிலேயே உட்கார வைத்து சாதாரண பப்ளிக் போல நடத்தினாராம். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஆர்டிஓ, கோபத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி ஆபிசுக்கு போயிட்டாராம். இந்த விவகாரம் வருவாய் துறை சங்கம் மூலம் சென்னை வரை கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட உயர் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளாராம். இன்ஸ் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஸ்ஐ வெளிப்படையாக தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார் என்று வருவாய் துறை அதிகாரிகள் உச்ச கட்ட கோபத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை தலைவரின் பேச்சால் அப்செட் ஆன சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,wiki ,yananda ,Salemkar ,Peter ,Lotus Party ,Chennai ,Salemgarr ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...