×

தெலங்கானா முதல்வர் கேசிஆர் பெயரை கையில் பச்சை குத்திய பெண் அமைச்சர்

திருமலை: தெலங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதிரத்தோர், முதல்வர் சந்திரசேகர ராவ் பெயரை தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். தெலங்கானா மாநிலம் ஏற்பட்டு 10ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதிரத்தோர், பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சாரா பவனில், சாலை ஏற்பாடு செய்த பழங்குடியினர் கலாச்சார விழாவில் பங்கேற்றார். ஆதிவாசி மற்றும் பஞ்சாரா கலாச்சார நிகழ்ச்சிகளுடன் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழங்குடி பஞ்சாராக்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது ஒரு ஸ்டாலில் பச்சை குத்தும் கடையைப் பார்த்த அமைச்சர் சத்யவதிரத்தோர், முதல்வர் கே.சி.ஆர் பெயரை தனது கையில் பச்சை (டாட்) குத்திக்கொள்ள ஆசைப்பட்டார். அதற்கு பச்சை குத்தினால் வலிக்கும் என்று அமைப்பாளர்கள் கூறினர். ஆனால் கே.சி.ஆர் பெயரை பச்சை குத்தும்படி அமைச்சர் சத்யவதி கேட்டுக்கொண்டார். அதன்படி வலியை தாங்கிக்கொண்டு முதல்வர் கேசிஆர் பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் பச்சை குத்தியதற்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.

அழிந்து வரும் பழங்குடியின கலாச்சாரங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கூறினார். பழங்குடியினர் நலனுக்கு முதலமைச்சர் கே.சி.ஆர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே இதே அமைச்சர் முதல்வர் கே.சி.ஆரை 3 முறை முதல்வராக்கும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என கூறி 1 ஆண்டாக செருப்பு அணியாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா முதல்வர் கேசிஆர் பெயரை கையில் பச்சை குத்திய பெண் அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister KCR ,Tirumala ,Welfare Minister ,Satyavathirathor ,Chief Minister ,Chandrasekhara Rao ,KCR ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து