×

கூட்டணியே உறுதி செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் தென்சென்னை உள்பட 9 தொகுதிகளில் பாஜ போட்டி: பணிகளை தொடங்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அதிரடி உத்தரவு

சென்னை: கூட்டணியே உறுதி செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் தென்சென்னை உள்பட 9 தொகுதிகளில் பாஜ போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் பணிகளை தொடங்க நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்க தொடங்கியுள்ளன. மத்தியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜவும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யவும், பாஜவுக்கு எதிரான பலம் பொருந்திய கூட்டணியை ஏற்படுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் வருகிற 23ம் தேதி எதிர்க்கட்சிகளின ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பாஜவுக்கு எதிராக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட உள்ளது. குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை அமித்ஷா முடிவு செய்துள்ளார். மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளை பாஜ கேட்டு வருகிறது. அதாவது தென்சென்னை, வேலூர், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், சிதம்பரம் உள்பட 9 தொகுதிகளில் போட்டியிட போவதாக பாஜ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி ெதாகுதியையும், ஐஜேகே தலைவர் பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று பாஜ தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாஜ முடிவு செய்துள்ள 9 தொகுதிகளை குறி வைத்து பாஜ தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த தொகுதிகளில் பாஜ சார்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

மேலும் பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், சக்ரவர்த்தி, கரு.நாகராஜன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்த 640 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் காலை 11.40 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணி 1 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமித்ஷா கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கினார். அதாவது, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ நிச்சயம் போட்டியிடும். வேட்பாளரை தயார்படுத்துங்கள். இப்போது இருந்தே தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுங்கள் என்றும் அவர் கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் மக்களை நேரில் சந்தித்து பாஜ அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என்றும் அப்போது அறிவுரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இருந்து வருகிறது. இதில் பாஜவுக்கு கூட்டணி தொகுதிகளே உறுதி செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியும் முடிவாகவில்லை. அதிமுக, பாஜ இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு கட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், பாஜ 9 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த 9 தொகுதிகளிலும் பாஜ போட்டியிடும். அதற்கு நான் பொறுப்பு என்று நிர்வாகிகளிடம் அமித்ஷா கூறியுள்ளார்.

இதனால், இந்த 9 தொகுதிகளை குறிவைத்து பாஜ வேலைகளை தொடங்கியுள்ளது. பாஜவின் இந்த நடவடிக்கை அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருக்கும் நாம் தான் எந்த தொகுதி என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜ இந்த தொகுதிகளில் தான் போட்டியிடுவோம் என்று தேர்வு செய்து பணிகளை தொடங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுக தலைவர்கள் கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது பல்வேறு துறைகளை சார்ந்த 22 பேரை சந்தித்து பேசினார். ெதாடர்ந்து அமித்ஷா பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், லோகநாதன் ஆகிய 5 பேரிடம் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை கூட்டத்தை முடித்து கொண்டு அமித்ஷா வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

The post கூட்டணியே உறுதி செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் தென்சென்னை உள்பட 9 தொகுதிகளில் பாஜ போட்டி: பணிகளை தொடங்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Baja Match ,Thensen ,Tamil Nadu ,Amitsha Action ,Chennai ,Baja ,Densen ,Tensen ,First ,Dinakaran ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...