×

அரிசிக்கொம்பன் ‘காடு கடத்தல்’: மேகமலைக்கு செல்ல வனத்துறை அனுமதி

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இந்த மலைப்பகுதியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜன் மெட்டு உட்பட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏலம், தேயிலை, காபி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இக்கிராமங்களில் ஏலம் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் என 8,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களில் 1.50 லட்சம் ஏக்கரில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு அரிய வகை வன விலங்குகள், பறவையினங்கள் உள்ளன. மேகமலை புலிகள் வன உயிரின சரணாலயமாகவும், ஹைவேவிஸ் சுற்றுலாத்தலமாகவும் இப்பகுதி உள்ளது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானையை, கடந்த ஏப். 27ம் தேதி மயக்க ஊசி போட்டு பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவித்தனர். இதையடுத்து மே 5ம் தேதி அரிசிக்கொம்பன் யானை தேக்கடியிலிருந்து இரவங்கலாறு பகுதிக்கு வந்து மணலாறு, ஹைவேவிஸ், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தது. பின்னர் கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியது. இதனால் இப்பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் கடந்த 5ம் தேதி அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு, மேகமலைக்கு செல்ல வனத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post அரிசிக்கொம்பன் ‘காடு கடத்தல்’: மேகமலைக்கு செல்ல வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Aricicomban ,Chinnamanore ,Highavis ,Revolt ,Theni District ,Chinnamanur ,Megamalai ,Sandalar ,Aricomban ,Dinakaran ,
× RELATED ஹைவேவிஸ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மூலிகைகள் நாசம்