×

ஒருபுறம் அடிதடி ; மற்றொருபுறம் பரோட்டா வீச்சு மயங்கிய மணப்பெண்ணை தூக்கி சென்ற மாப்பிள்ளை: திருமண வீட்டில் கலாட்டா

நாகர்கோவிலை சேர்ந்த வாலிபருக்கும், ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த மணப்பெண்ணுக்கும், மறவன்குடியிருப்பில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இரவு விருந்தில் பரோட்டா, சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இரு வீட்டாரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது மணமகள் வீட்டாரின் நண்பர்கள், உறவினர்கள் சிலர் மது போதையுடன் காணப்பட்டனர். அவர்கள் மணமகனின் உறவினர்கள், பெண்கள் மீது மோதியுள்ளனர். இதனை தட்டிக்கேட்டதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் முடிந்தது. இதில் திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த பிளாஸ்டிக் இருக்கைகளை சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது.

இதில் 6 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தை பார்த்த மணமகள் திடீரென்று மணமேடையில் மயக்கம்போட்டு விழுந்தார். அவரை மணமகன் தனது தோளில் தூக்கியவாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருவீட்டார் மோதல் நடந்துகொண்டிருந்த வேளையில் சமையல் கூடத்தில் பரோட்டோ மாஸ்டர்கள் கருமமே கண்ணாக புரோட்டோவை வீசிக்கொண்டு இருந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post ஒருபுறம் அடிதடி ; மற்றொருபுறம் பரோட்டா வீச்சு மயங்கிய மணப்பெண்ணை தூக்கி சென்ற மாப்பிள்ளை: திருமண வீட்டில் கலாட்டா appeared first on Dinakaran.

Tags : Galata ,Maravanakkutiripam ,Nagarkovela ,Rajakkamangalam ,Barota ,
× RELATED நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய...