பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியனும், முன்னாள் நெம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(36வயது, 3வது ரேங்க்), நெம்பர் ஒன் வீரர் கார்லோஸ் அல்கராஸ்(20வது வயது, ஸ்பெயின்) ஆகியோர் களம் காண உள்ளனர். நடப்பு சாம்பியன் ரபேல் நடால்(ஸ்பெயின்) காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே ஜோகோவிச் தான் இந்த முறை சாம்பியன் என்பது பேச்சானது.
அதற்கேற்ப இப்போது 14வது முறையாக அரையிறுதி வரை முன்னேறி உள்ளார். அந்த அரையிறுதியில் முதல்முறையாக விளையாடப் போகும் நெம்பர் ஒன் வீரரான கார்லோசை எதிர்த்து களம் காண உள்ளார். அதில் வென்று 7வது முறையாக பைனலுக்கு முன்னேறப்போவது அனுபவமா, முதல் முறையாக முன்னேறப் போவது இளமையா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அதேபோல் 2வது அரையிறுதியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(26வயது, 27வது ரேங்க்), நார்வே வீரர் கஸ்பர் ரூட்(24வயது, 4வது ரேங்க்) ஆகியோர் மோத உள்ளனர்.
இதில் ஸ்வெரவ் தொடர்ந்து 3வது முறையாக பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் களம் காண உள்ளார். இந்த முறை பைனலை எட்டிப் பார்த்து விட அவர் தீவிரமாக இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்வெரவுக்கு முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு முன்னேறிய பெருமையும் கிட்டும். அதே நேரத்தில் கடந்த முறை பிரெஞ்ச் ஓபனில் இறுதி ஆட்டத்தில் களம் கண்டவர் கஸ்பர். அதனால் ஸ்வெரவின் முயற்சிக்கு கஸ்பர் முட்டுக்கட்டை போடும் வாய்ப்புகளும் உள்ளன.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் யாருக்கு பைனலில் வாய்ப்பு: இன்று அரையிறுதி ஆட்டங்கள் appeared first on Dinakaran.
