×

பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: உயரதிகாரிகள் பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில், பார்வையற்றோருக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பூந்தமல்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தில் நேற்று காலை பார்வையற்றோருக்கான உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல நிறுவன பொறுப்பு அதிகாரி ஸ்ரீப்ரியா தலைமை தாங்கினார். ஆராய்ச்சி அதிகாரி தாகூர் வரவேற்றார்.

இதில், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் பங்கேற்று, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர், பார்வையற்றோர் கலப்பட உணவுகளை எப்படி கண்டுபிடிப்பது, எப்படி பரிசோதிப்பது, ரசாயன மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது, கலப்பட உணவு கண்டறியப்பட்டால் எப்படி, யாரிடம் புகார் கொடுப்பது குறித்து சிறப்பு வழிமுறைகளோடு, பிரத்யேக ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், எதிர்காலத்தில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உணவு பாதுகாப்பில் எதிர்கொள்ளும் சவால்கள், அதை கையாள்வது, சத்தான தரமான கலப்படமற்ற உணவுகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில், நிறுவன அதிகாரி எட்டி தாமஸ் மற்றும் பார்வையற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: உயரதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Poondamalli ,Thiruvallur District Food Safety Department ,
× RELATED குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்கள்...