×

வாணியம்பாடியிலிருந்து ஆம்பூருக்கு செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கும் டிரைவர்: இணையதளங்களில் வைரல்

வாணியம்பாடி: வாணியம்பாடியிலிருந்து ஆம்பூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை அதன் டிரைவர் செல்போனில் பேசியபடியே ஓட்டிச்சென்றுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ், லாரி, கார், இருசக்கர வாகனம் உள்பட எந்த வாகனத்தையும் இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசக்கூடாது என்பது போக்குவரத்து விதி. செல்போன் பேச்சுகளால் சாலைகளில் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுவதால் இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு செல்லும் டவுன் பஸ்சை டிரைவர், செல்போனில் பேசியபடி ஓட்டும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதுபற்றிய விவரம்: வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு தினசரி டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் ஒரு பஸ்சின் டிரைவர், போக்குவரத்து விதிமீறி செல்போனில் பேசிக்கொண்டே தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை இயக்கி வருகிறார். குறிப்பாக அவர் மிக்சர், பக்கோடா, சமோசா என நொறுக்குதீனிகளை ஒருபுறம் சுவைத்தபடியே, எதிர்முனையில் பேசுபவரிடம் சாவகாசமாக பேச்சுக்கொடுத்துக்கொண்டு பஸ்சை இயக்குகிறார்.

மேலும் ெஹட்போன் அணிந்து கொண்டும் பேசுகிறார். மிகவும் அசாதாரணமாக இந்த பஸ்சை இயக்குகிறார். இந்த பஸ்சில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும். ஆனால் அதன் டிரைவர் பயணிகளின் நலனை மறந்தும், போக்குவரத்து விதி மீறியும் தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியுள்ளார். இதனை பஸ்சில் பயணித்த ஒரு பயணி, செல்போனில் வீடியோ எடுத்து இணையதளங்களில் பரவச்செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

போக்குவரத்து விதியை மீறி, பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட டிரைவர் மீது அரசு போக்குவரத்து கழகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர்-வாணியம்பாடி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஷூ கம்பெனி பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடி இயக்கியதால் அந்த பஸ் விபத்தில் சிக்கி அதில் பயணித்த 5க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

The post வாணியம்பாடியிலிருந்து ஆம்பூருக்கு செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கும் டிரைவர்: இணையதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Vanyambadi ,Ambur ,Ampur ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு