டெல்லி: லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் ெதாடங்கிய நிலையில், பாஜகவின் ‘மிஷன் 2024’ வலைக்குள் ெதலுங்கு தேசம், சிரோமணி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பாஜகவுடனான கூட்டணி பேரங்களும் தொடங்கிவிட்டன. அதற்காக பல்வேறு காரணங்களால் காங்கிரசுடன் ஒத்து போகாத கட்சிகளை, தங்களது கூட்டணியில் வலைத்து போட பாஜக முடிவு செய்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளையும், மீண்டும் கூட்டணியில் இணைக்கும் வேலைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா போன்ற தலைவர்கள், ‘மிஷன் 2024’ வலைக்குள் பல கட்சிகளையும் சேர்க்க பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளான சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி), தெலுங்கு தேசம் (டிடிபி), ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுபாஷ்பா உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றன.
தெலுங்கு தேசம் கட்சியை பொருத்தமட்டில், கடந்த 3ம் தேதி அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து பாஜக – தெலுங்கு தேசம் இடையிலான கூட்டணி குறித்த ஊகங்கள் வலுப்பெற்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக கடந்த 2018ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் பழைய கூட்டணிக் கட்சியான அகாலி தளமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர ஆர்வமாக உள்ளது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் ஆண்டு விழாவில் பேசிய அகாலிதளம் தலைவர் மகேஷிந்தர் சிங் கிரேவால், ‘காங்கிரசுடன் அகாலிதளம் கூட்டணி வைக்காது.
பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்குப் பின், பாஜகவுடனான அகாலி தளத்தின் நெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய வரவாக முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் அணுகுமுறையும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா ரயில்வே அமைச்சருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட்டு, மிக குறைந்த சீட்களை மட்டுமே பெற்றது. அதனால் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
The post லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் தொடங்கியது; பாஜகவின் ‘மிஷன் 2024’ வலையில் சிக்கும் கட்சிகள் எவை?.. தெலுங்கு தேசம், சிரோமணி, மஜத-வுடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.