×

பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் அரிசிக்கொம்பன் யானை குமரி வனப்பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை-வனத்துறை அதிகாரிகள் உறுதி

நாகர்கோவில் : கேரளா மாநிலத்தையும், தமிழ்நாட்டின் கம்பம் பகுதிகளையும் நடுங்க வைத்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை நேற்று அதிகாலை 2 மணியளவில் களக்காடு வனப்பகுதிக்கு உட்பட்ட களக்காடு -முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் முத்துகுளி அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணிக்குத்தான் யானையை வனத்துறையினர் விட்டுள்ளனர். தொடர்ந்து 2 நாட்களுக்கு யானையின் நடமாட்டம் வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தையொட்டிய வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதால் அரிசிக்கொம்பன் யானை குமரி மாவட்ட வனப்பகுதியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் குமரி மாவட்ட வனத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதே வேளையில் யானை மீண்டும் கேரள வனப்பகுதியான நெய்யார் காட்டுப்பகுதியில் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குற்றியார், அப்பர் கோதையார், ஆன நிறுத்தி வனப்பகுதிகள் வழியாக திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யார் வனப்பகுதிக்கு யானை சென்றடையும் நிலை உள்ளது. தமிழ்நாட்டின் ஆன நிறுத்தி பகுதியில் இருந்து ஒரு இரவில் யானை நடந்தால் நெய்யார் வனப்பகுதியில் வந்தடையலாம். மேலும் களக்காடு-முண்டந்துறை பகுதியில் இருந்து யானை வழித்தடமாக உள்ள பேயாறு, பாண்டிப்பத்து, கல்லார்-போணக்காடு, வழியாக விதுரா சென்றடைய 12 மணி நேரம் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

இந்த பகுதிகள் யானைக்கூட்டம் அடிக்கடி நடந்து செல்கின்ற பகுதி ஆகும். கேரளா-தமிழ்நாடு எல்லைப்புற வனப்பகுதியாக இவை உள்ளது. ஆனநிறுத்தி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வருவதும் போவதும் அடிக்கடி நடைபெறுவது உண்டு. ஒரு நாளில் 40 முதல் 100 கி.மீ தூரம் வரை கடக்க காட்டு யானைகளால் இயலும். தற்போது அரிசிக்கொம்பன் விடப்பட்டுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் 20 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. புலிகள் காட்டு யானைகளை தாக்கிய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும் உண்டு. இருப்பினும் யானை பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடும் என்ற நம்பிக்கை வனத்துறையிடம் உள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முத்துக்குளிவயல் பகுதி அருகே அப்பர்கோதையாறு பகுதியில் அரிசிக்கொம்பன் யானை விடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் மட்டுமே உள்ளது. அந்த இடம் கன்னியாகுமரி வனக்கோட்டத்திற்கு வராது. களக்காடு- முண்டந்துறை பகுதிக்கு உட்பட்ட களக்காடு கோட்டத்திற்குள் வரும். அதனையொட்டிய அப்பர் கோதையாறு பகுதிகளும் களக்காடு கோட்டத்தில் வரும். இதன் ஓர பகுதிகள் அழகியபாண்டியபுரம் பாலமோர் எஸ்டேட் ஒட்டிய பகுதிக்கு வரும். முத்துக்குழிவயல் ஏரியா மிகவும் பெரிய பகுதி ஆகும்.

களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குள் காணி குடியிருப்புகள் ஏதும் இல்லை. குமரி மாவட்டத்தில் தான் 42 காணி செட்டில்மென்ட்கள் உள்ளன. 100, 150 பேர் களக்காடு – முண்டந்துறை பகுதியில் உள்ளனர். இவர்கள் மலைப்பகுதியில் விவசாயம் செய்கின்றனர். அவர்கள் மலையின் கீழ் பகுதியில் வசிக்கின்றனர். தற்போது அரிசிக்கொம்பன் யானை விடப்பட்டுள்ள பகுதிக்கும், குமரி மாவட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இதற்காக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

The post பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் அரிசிக்கொம்பன் யானை குமரி வனப்பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை-வனத்துறை அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Arisikkomban ,Kumari forest- forest department ,Nagercoil ,forest department ,Kerala ,Kambam ,Tamil Nadu ,Kumari forest-Forest department ,
× RELATED காஸ் சிலிண்டர் விலையேற்றம் எதிரொலி...