×

காஞ்சிபுரம் வைகாசி பிரமோற்சவ விழா வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

காஞ்சிபுரம், ஜூன் 7: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சாமியை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள், தேவி – பூதேவி சமேதராய் ஹம்ச வாகனம், சூரியப்பிரபை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 3ம் நாள் கருடசேவை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மற்றொரு முக்கிய நிகழ்வின் 7வது நாளான நேற்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணி அளவில் தேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கேடயத்தில் தேரடிக்கு எழுந்தருளினார். பின்னர், தேரில் அமர்ந்தவுடன் பக்தர்கள் பலரும் தேரில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். தேரடியில் உள்ள படிகள் வாயிலாக தேருக்குள் சென்று பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.

விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, கச்சபேஸ்வரர் கோயில், சங்கர மடம், பூக்கடை சத்திரம், வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின்போது, வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணம் பாடியவாறு சென்றனர். தேரோட்டத்தை காண, வேலூர், அரக்கோணம், திருத்தணி, பெரும்புதூர், சென்னை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில், தேரோட்டத்தை காணவரும் வெளியூர் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் ஆகியவை வழிநெடுகிலும் வழங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து, நாளை (8ம் தேதி) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. 9ம் தேதி பெருமாள் வெட்டி வேர் சப்பரத்தில் வீதியுலா வருகிறார். அதன் பின்னர், விழா நிறைவு பெறுகிறது. இந்த தேரோட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோயில் செயல் அலுவலர்கள் சீனிவாசன், தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவில் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில், 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சலவை தொழிலாளி மயங்கி விழுந்து பலி
காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் நாகலூத்து தெருவை சேர்ந்தவர் ராஜி மகன் ராமமூர்த்தி (60). சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தேரோட்டத்தை காண ஜவுளிக்கடை சத்திரம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராமமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேரோட்டத்தை காண சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காஞ்சிபுரம் வைகாசி பிரமோற்சவ விழா வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Vaikasi Promotsava Festival Varadaraja Perumal Temple ,Kolagalam ,Kanchipuram ,Kanchipuram Varadaraja Perumal Temple Vaikasi Promotsava Festival ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி...