×

மாவட்டத்தில் 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது

தர்மபுரி, ஜூன் 7: தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திறம்பட செய்த தனி நபர் மற்றும் கல்லூரிகளுக்கு, 2022ம் ஆண்டிற்கான பசுமை சாதனையாளர் விருது மற்றும் ₹1 லட்சம் காசோலையை கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் தொழிற்சாலைகள், தனிநபர்கள், தன்னார்வலர்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோருக்கு பசுமை சாதனையாளர் விருதிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாவட்ட அளவிலான விருது குழுவின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 2 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டு, வாரிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பென்னாகரம் ஒன்றியம் பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தாமோதரன், நல்லம்பள்ளி ஒன்றியம் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், இருவரும் தேர்வு செய்யபபட்டனர். வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் தாமேதரன், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார். மேலும் மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறார். மருதம் நெல்லி பாலிடெக்னின் கல்லூரி நிர்வாகத்தினர் கல்லூரியை பசுமை போல உருவாக்கியதுடன் கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நர்சரி உருவாக்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

எனவே இரண்டு பேருக்கும் பசுமை சாதனையாளர் விருது மற்றும் ₹1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பழனிதேவி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், உதவிப் பொறியாளர் லாவண்யா, சிஇஓ நேர்முக உதவியாளர் கேசவகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

The post மாவட்டத்தில் 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி