×

கேரளாவில் விடும்படி கோரிய வழக்கு அரிசிக்கொம்பன் யானையை இங்குதான் விட வேண்டுமென உத்தரவிட முடியாது: நீதிபதிகள் கருத்து

மதுரை: அரிசிக்கொம்பன் யானையை தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பிடித்துள்ளது. எனவே யானையை இங்கு தான் விட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம் இருந்த இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் உள்ள ரிசார்ட்கள் யானைகளின் வலசைப்பாதை தடத்தை மாற்றியுள்ளன. இதனால் யானைகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

சின்னக்கானலில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே, தமிழ்நாடு வன எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா மற்றும் சின்னக்கானல் பகுதியில் அரிசிக்கொம்பனை விடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், இதுபோன்ற விவகாரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும். விளம்பர நோக்கத்தில் இந்த மனு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த யானையை, தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவிட்டு பிடித்துள்ளனர். இந்த யானையை இங்கு தான் விட வேண்டும். அங்கு தான் விட வேண்டுமென நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த வழக்கின் விசாரணை வனத்துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.

* மதிகெட்டான் வனப்பகுதியில் விடக்கோரி போராட்டம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அரிசிக்கொம்பன் யானையை, பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லும்படி போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது யானையை பிடித்த பிறகு அனுதாபப்பட்டு சமூக வலைத்தளங்களில் யானையின் வீடியோக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து மயக்க ஊசி ெசலுத்தி பிடிப்பதால் அதன் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே, அரிசிக்கொம்பன் யானை பிறந்து வளர்ந்த மதிகெட்டான் வனப்பகுதிக்கே திரும்ப கொண்டு வந்து விடும்படி சின்னக்கானல் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நேற்று சூரியநெல்லி – சிங்குகண்டம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

The post கேரளாவில் விடும்படி கோரிய வழக்கு அரிசிக்கொம்பன் யானையை இங்குதான் விட வேண்டுமென உத்தரவிட முடியாது: நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Arishikomban ,Madurai ,Tamil Nadu government ,Arisikomban ,Arisikkomban ,Kerala ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம்...