×

நண்பர் இறப்பு செய்தியை கேட்டதும் மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவர்: சிறு வயது முதல் பணி ஓய்வு வரை ஒன்றாக பயணம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 4ம் தெருவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன்(81). மன்னார்குடி அசேஷத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(80). சிறுவயதில் இருந்தே இணைபிரியாத நண்பர்களான இருவரும், மன்னார்குடி அடுத்த தலையாமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மன்னார்குடியில் பள்ளி படிப்பை ஒன்றாக முடித்த இவர்கள் நாகையில் ஒரே அறையில் தங்கி பாலிடெக்னிக் படிப்பை முடித்தனர். இதையடுத்து பாமணியில் இயங்கி வரும் அரசு உர தொழிற்சாலையில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து ஒரே நாளில் பணி ஓய்வும் பெற்றனர். அதுபோல் இவர்களது குடும்பத்தினரும் நட்போடு பழகி வந்தனர்.

இந்தநிலையில் சிவராமகிருஷ்ணன் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை இறந்தார். இதுகுறித்து ராமலிங்கம் குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. ராமலிங்கத்துக்கும் உடல்நலம் சரியில்லாததால் அவரின் நண்பர் இறந்த தகவலை கூறவில்லை. சிவராமகிருஷ்ணன் இறப்பு துக்க நிகழ்ச்சிக்கு ராமலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் சென்று விட்டு மாலை வீடு திரும்பினர்.அப்போது அவர்களிடம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று ராமலிங்கம் கேட்டார். அதற்கு உங்களது நண்பர் சிவராமகிருஷ்ணன் இறந்து விட்டார்.

அவரது துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வருவதாக கூறினர். இதை கேட்ட அடுத்த நொடியே ராமலிங்கம் மயக்கமடைந்து உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். நண்பர்களான சிவராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோரின் இறுதி சடங்குகள், மன்னார்குடி இரட்டைக்குளம் இடுகாட்டில் நேற்று அடுத்தடுத்து நடந்தது.சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி பள்ளி, கல்லூரி, வேலை என அனைத்திலும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த இருவரும் இறப்பிலும் இணைபிரியாதது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post நண்பர் இறப்பு செய்தியை கேட்டதும் மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவர்: சிறு வயது முதல் பணி ஓய்வு வரை ஒன்றாக பயணம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Sivaramakrishnan ,Mannargudi 4th Street ,Thiruvarur District ,Ramalingam ,Mannargudi Asheshat ,Fallen Fallen Elderly ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...