×

சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக உரக்க குரல் எழுப்பியவர் காயிதே மில்லத்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக உரக்க குரல் எழுப்பியவர் காயிதே மில்லத் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காயிதே மில்லத்தின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கல்லூரி படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். ஆட்சி மொழிப் பிரச்னையில், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர்.

அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா. ‘இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது’ என்று அவரது மறைவின் போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம். கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’ முகமது இஸ்மாயிலின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக உரக்க குரல் எழுப்பியவர் காயிதே மில்லத்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Qaide Millat ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Kaideh Millat ,Kaithe Millat ,M.K. Stalin ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...