×

128வது பிறந்தநாள் காயிதே மில்லத் நினைவிடத்தில் கட்சித்தலைவர்கள் மரியாதை

சென்னை: 128வது பிறந்தநாளையொட்டி காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். காயிதே மில்லத் 128வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், எஸ்.அப்துல் ரஹீம், செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர் எம்.பி. மரியாதை செலுத்தினார். இதில் அசன் மவுலானா எம்.எல்.ஏ, மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாமக சார்பில் அக்கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ தலைமையில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் செல்வம், செல்லத்துரை உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். மதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

The post 128வது பிறந்தநாள் காயிதே மில்லத் நினைவிடத்தில் கட்சித்தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kaithe Millat Memorial ,CHENNAI ,Kaithe Millat ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...