×

தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் : சசிகலா, டிடிவி தினகரன் புகழஞ்சலி!!

சென்னை : “காயிதே மில்லத்” அவர்களின் 128-ஆவது பிறந்த நாளையொட்டி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.

அதே போன்று, கடந்த 2003ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது என்பதையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.தன்னலமற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுத்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காக வாழவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம்.”என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் நலன், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்காக பாடுபட்ட கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள் இன்று. மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காயிதே மில்லத் அவர்கள், அரசியல் நிர்ணய சபையில் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வாதிட்டவர்.ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவரிடத்திலும் அன்பு செலுத்திய கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த நாளில் அவரது பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் : சசிகலா, டிடிவி தினகரன் புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Kaithe Millat ,Tamil Nadu ,Sasikala ,DTV Dhinakaran Pugajanjali ,Chennai ,DTV Dhinakaran ,Kaite Millat ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...