×

பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் பெருமாள்

கீழாம்பூர், தென்காசி மாவட்டம்

அத்திரி முனிவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள். ஒருவன் முனிவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கங்கையில் நீராடுவதற்காக சென்றான். அடுத்தவனுக்கும் அவ்வாறே தானும் நீராட ஆசைதான். ஆனால், குருவிற்குச் செய்ய வேண்டிய சேவைகள், தானும் இல்லாவிட்டால் பாதிக்குமே என்று தயங்கி, தன் ஆசையைத் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான். ஆனால், முனிவருக்கு இந்தச் சீடனின் ஏக்கம் புரிந்தது.

உடனே தன் தண்டத்தை எடுத்து தரையில் அடித்தார். அங்கேயே கங்கை நீர் ஊற்றாகப் பொங்கி, நதியாகப் பிரவாகம் எடுத்தது. முனிவர், வடக்கே ஓடும் கங்கையிலிருந்து நீரைக் கடனாகப் பெற்ற வகையில் இந்த நதி ‘கடனா நதி’ என்றழைக்கப்பட்டது. இந்நதியில் சீடன் நீராடி மன அமைதி பெற்றான். ஒருபோதும் வற்றாத ஆறு என்பதால் கடனா நதியைக் ‘கருணை நதி’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்நதியின் தென்பகுதியில் (வலப்புறம்) கீழாம்பூர் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பூமிதேவி – நீளாதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அனுபவம். கல்வெட்டு செய்திப்படி ஆம்பல் பூக்கள் அதிகம் காணப்பட்ட ஊர் என்பதால் ‘ஆம்பலூர்’ என்று இத்தலம் அழைக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் இவ்வூரை ‘சிநேகபுரி’ என்று சொல்கிறார்கள். சிநேகம் என்றால் அன்பு. புரி என்றால் ஊர். அன்பு+ஊர் அன்பூராகி பின்னர் பேச்சு வழக்கில் ஆம்பூராகியிருக்கிறது.

ஆம்பூர் மக்கள் முதலில் சன்யாசி மேடு என்னும் பகுதியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ஏற்பட்ட சேர-சோழ-பாண்டிய போர்களின்போது, கி.பி. 1500 வருடவாக்கில் மேற்கு நோக்கிச் சென்று, ஊரின் தெற்குப் பகுதியில் முதல் குடியிருப்பை அமைத்ததாகவும் சொல்கிறார்கள். பின்னர் ஊரின் வடபகுதியிலும் குடியிருப்புகள் உண்டாயின.

முதலில் தெற்குத் தெருவிலும் பின்னர் வடக்குத் தெருவிலுமாக இரண்டு பெருமாள் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இவ்விரு ஆலயங்களுக்கும் நடுவில் பொதுவாக சிவன் கோயிலும் உள்ளது. இந்த சிவன் கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி, அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். ஊரின் வடபகுதியில் முதலில் விநாயகப் பெருமானுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. தெற்குத் தெரு கோவிலில் கொலுவிருப்பவர் வெங்கடேசப் பெருமாள்.

பெருமாளின் வலதுபுறம் பூமாதேவியும் இடதுபுறம் நீளாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மூலவர் சந்நதிக்கு எதிரே கருடாழ்வாரை தரிசிக்கலாம். வெளிப் பிராகாரத்தில் வேப்ப மரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. மேல் ஆம்பூர் பூங்குறிச்சி குளக்கரையில் 1916ம் ஆண்டைச் சேர்ந்த 519 எண் கல்வெட்டு, ‘சகம் 1560ம் ஆண்டு (கொல்லம் 813), சிவசைலநாதருக்கு வழிபாடு செய்வதைத் தலையாய கடமையென ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கடையம் ஊர் மக்கள் மேற்கொண்டனர்’ என்ற செய்தியும் பணம், நிலம் முதலியன கொடுத்தனர் என்ற தகவலும் உள்ளன.

கீழாம்பூரில் சத்திரத்தை ஒட்டிய பகுதியில் எடுக்கப்பட்ட 518 எண் கல்வெட்டில் வட்டெழுத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேணாட்டு அரசன் ரவிவர்மனைக் குறித்த செய்தியும் உள்ளது. கேரள அரசன் தன் மனைவியிடம் கோபம் கொண்டு அவளை விட்டு நீங்கியிருந்ததாகவும் பின்னர் கீழாம்பூரிலுள்ள தெற்குத் தெருவில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்து, அவர் அருளால் ஒன்று சேர்ந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டார்.

இதனைக் கண்டு பதறிய நீளாதேவி, இந்த விஷயத்தைப் பார்வதி தேவிக்குத் தெரிவிக்க உடனே புறப்பட்டார். தன் கணவரின் தங்கையாகிய பார்வதியிடம் நீளாதேவி விவரம் சொல்ல, அதைக் கேட்டு விசனமுற்று ஓடோடி வந்த பார்வதி, சிவபெருமானின் கழுத்துப் பகுதியைப் பிடிக்க, அவர் நீலகண்டரானார். அவ்வாறு நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால், இக்கோயிலில் வெங்கடேசப் பெருமாள் மற்றும் பூமிதேவி சிலைகளைவிட நீளாதேவி சற்று முன்னே அமைந்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்த வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய்தால் கடன் தொல்லை நீங்கும்; வேகமாகப் புறப்படும் தோரணையில் முன் வைத்த காலுடன் நிற்கும் நீளாதேவியை வேண்டி வழிபட்டால் குபேர யோகம் உண்டாகும்; அனைத்து நோய்களும், விஷ சம்பந்தமான உபாதைகளும் இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு உடனேயே எளிதாக நீங்கும்; கணவன் – மனைவியிடையே கருத்து வேற்றுமை இருந்தாலோ அல்லது விவாகரத்து வரை செல்லும் வழக்காக இருந்தாலோ, இக்கோயிலில் வந்து வழிபட்டால், வேணாட்டு அரசன் ரவிவர்மனுக்கு மனைவியோடு மீண்டும் சேரும் பாக்கியம் கிடைத்ததைப் போன்ற நற்பலன்கள் கிட்டும் என்கிறார்கள்.

மூலவர் கருவறையில் காட்சி தருவது போலவே, பூமிதேவி-நீளாதேவியுடன் அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாகவும் பெருமாள் தரிசனம் தருகிறார். மணிமண்டபம் இரண்டு மணிகளைக் கொண்டதாக உள்ளது. இங்குள்ள வலப்புற தூணில் யோக நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் மூலவரை நோக்கியபடி கருடாழ்வார் கொலுவீற்றிருக்கிறார். மண்டப இடப்புறச் சுவரில் 1979ம் ஆண்டு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம் பற்றிய செய்திகள் உள்ளன. கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வில்வ மரம் வான்நோக்கி வளர்ந்துள்ளது. கோயிலின் வலப்புறம் அமைந்துள்ள கிணற்றை ஒட்டிக் கீழ்பகுதியில் நெல்லி மரமும், வேப்ப மரமும் உள்ளன. இவ்விரண்டு விருட்சங்களுக்கும் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை நடப்பதுண்டு. நெல்லி மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டைகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாளான வைகாசி மூலநட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும் நடைபெறுகிறது.

புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலில், பித்தளை நாகருடன் காட்சி தரும் தேக்கு மரத்தாலான சேஷ வாகனம் உள்ளது. பித்தளை வார்ப்புடன் கூடிய கருட வாகனமும் உண்டு. சிறியதாக ஒரு கேடயமும் உள்ளது. குபேரன், இந்திரன், சுதர்சன பாண்டியன் மற்றும் சிநேகபுரியான் என்றழைக்கப்படும் கேளையப்பன் போன்றோர் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள்.

மன்னன் சுதர்சன பாண்டியன், பிள்ளைப் பேறு இல்லாமல் பல காலம் வேதனைப்பட்டான். ஆம்பூர் வெங்கடேசப் பெருமாள் கீர்த்தியைக் கேள்விப்பட்ட இம்மன்னன், இவ்வூருக்கு வந்து வாசம் செய்து, அச்வமேத யாகம் செய்தான். யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு, முறைப்படி யாகத்தைத் தொடங்கினான். அவனுடைய பக்தியின் ஆழத்தை சோதிக்க விரும்பினார் ஈசன். உடனே தன் மகன் சுப்ரமணியரை அனுப்பி, மன்னனின் அச்வமேத யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டச் சொன்னார்.

அவர் உத்தரவுப்படியே சுப்ரமணியர் செய்ய, வெகுண்டான் மன்னன். முழுமை பெறாத யாகத்தால், சுப்ரமணியரால் ஏற்பட்ட இடையூறால், தன் எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று பதைபதைத்தான். ஆகவே, யாகக் குதிரையைக் கட்டி வைத்திருப்பவர் யார் என்று உணராமல், கோபத்துடன் சுப்ரமணியருடன் போரிட முன் வந்தான். அவரும் அவனை எதிர்கொண்டார். ஆனால், தனக்கு எதிரியாக எதிரே நிற்பவர் முன், தான் பலமெல்லாம் இழந்ததை உணர்ந்தான் மன்னன்.

தான் போரிடுவது தெய்வாம்சத்துடன்தான் என்பதை உடனே புரிந்துகொண்டான். அதே சமயம் ஒரு பேரொளி தோன்றி, அவனை ஆட்கொண்டு, ஆசியளித்தது. அது ஈசனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்துகொண்ட பாண்டியன், சிவசைலநாதரையும், சுப்ரமண்யரையும் உளமாற வணங்கினான். வாயாரப் புகழ்ந்தான். அவர்களுடன் சிநேகமானான். அதன் பலனாக அவர்களிடம் ஆசி பெற்று, நேராக வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்தான்.

சிவ – வைணவ ஒற்றுமைக்கு இந்தத் தலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சுதர்ஸன பாண்டியன் சிவசைலநாதரிடம் அருள் பெற்று, பின்னர் பெருமாளிடம் தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்துகொண்டதை நினைவுபடுத்தும் வகையில், உற்சவர் சிவசைலநாதர் கீழாம்பூருக்கு (சிநேகபுரி) வரும்போது, அவருக்கு அனைத்துவிதமான மரியாதைகளையும், வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள இரண்டு பெருமாள் கோயில்களில் அளிக்கப்படுகின்றன.

கீழாம்பூருடன் தொடர்புடையது சிவசைலநாதர் ஆலயம். சிவசைலத்தில் குடிகொண்டுள்ள ஈசன், அன்னை பரமகல்யாணியுடன் காட்சி தருகிறார். கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு, அசரீரி வாக்குப்படி சிவசைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை. ஆம்பூர்-ஆழ்வார்குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான சிவசைல நாதர், தன் மனைவி பரமகல்யாணியுடன் மறுவீடு செல்லும் நிகழ்ச்சிக்காக கீழாம்பூருக்கு மே மாதத்தில் வருகை தரும் வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வஸந்த உற்சவம் மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து, முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் (தன் அண்ணன் வீட்டில்!) இளைப்பாறிக் கொள்கிறார் அம்பாள். நைவேத்தியம், தீபாராதனைகளை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு மூன்றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்றடைவார், ஊர் மகளான பரமகல்யாணி.

சிவசைலநாதரும் வெங்கடேசப் பெருமாளும் இணைந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலமான கீழாம்பூர், தென்காசி-அம்பாசமுத்திரம் பேருந்து மார்க்கத்தில் (ரயில் மார்க்கத்திலும்) ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது.

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Keezhampur ,Tenkasi District ,Sage Athri ,Ganga ,
× RELATED திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள்