டெல்லி : பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர் டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலியுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரஜ் பூஷண் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அப்போது, அனைவருக்கும் சட்டம் பொதுவானது என்று மல்யுத்த வீரர்களிடம் அமித்ஷா உறுதி அளித்ததாக தெரிகிறது. அதே சமயத்தில் பிரஜ் பூஷண் மீதான நடவடிக்கை குறித்து அமித்ஷா எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. முன்னதாக பிரஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 2 மாதங்கள் போராடியும் பலன் அளிக்காததால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாளில் அந்த கட்டிடம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தரதரவென இழுத்துச் சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் திரண்ட சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரிடம் விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை பெற்றனர். அத்துடன் ஜூன் 9ம் தேதிக்குள் பிரஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கெடு விதித்தனர்.
The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு..பிரஜ் பூஷண் மீதான நடவடிக்கை குறித்து அமித்ஷா உறுதி அளிக்கவில்லை என தகவல்!! appeared first on Dinakaran.