திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் சிறுமலை சந்தையில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகேயுள்ளது சிறுமலை பகுதி. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக இங்கு வாழையும், பலாவும் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், இந்த மலையில் மிளகு, காப்பி, பலா, வாழை, எலுமிச்சை, அவரை, பீன்ஸ், சௌசௌ ஆகியவையும் பயிரிடப்படுகிறது.
தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், சிறுமலை பலா சந்தை கலைகட்ட துவங்கி உள்ளது. இந்த சிறுமலை பலா பழத்திற்கு என தனிமவுசு உண்டு. மற்ற மாவட்டங்களில் விளையும் பலா பழத்தை விட இங்கு விளையும் பலா பழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டவை. மேலும் இப்பலா பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இது தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிம சத்துக்களும் பலா பழத்தில் அடங்கியுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இந்த பலா பழங்களை போட்டி போட்டு கொண்டு ஏல முறையில் எடுத்து செல்வது வழக்கம். இந்த முறை சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த சந்தையில் ஏலமுறையில் பலா பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பலா பழங்கள் உருவத்திற்கும் அதனுடைய சுலையின் பருமனை பொறுத்து ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் பழத்திற்கு ஏற்றாற்போல ஒரு பழம் ரூ.500 முதல் விலை போகிறது. சீசன் துவக்கத்திலேயே பலா பழங்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சிறுமலை சந்தையில் பலா பழ சீசன் துவக்கம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.