×

குந்தா அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

 

மஞ்சூர், ஜூன்5:நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.அப்பர்பவானி,அவலாஞ்சி,எமரால்டு,பைக்காரா, போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்திமைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குந்தா, ஊட்டி, குன்னுார் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியில் தொடர் மழையின் காரணமாக தற்போது 83 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குந்தா அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kunta Dam ,Manjoor ,Nilgiri district ,Upper Bhavani ,Avalanchi ,Emerald ,Baikara ,Porthimandu ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்