×

கடவுள் அருளால் உயிர் பிழைத்தோம்: சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய லாரி டிரைவர் உருக்கம்

திருப்பத்தூர்: கடவுள் ஆசிர்வாதத்தால் உயிர் பிழைத்தோம். நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை என்று ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய திருப்பத்தூர் லாரி டிரைவர் உருக்கமாக கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் இறந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு அருகே உள்ள ஜெல்லகவுண்டனூர் ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் காந்தி(45), லாரி டிரைவர். காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் தப்பியது குறித்து அவர் இன்று கூறியதாவது:சென்னை எழும்பூரில் உள்ள அசோக் லேலண்ட் லாரி நிறுவனத்திலிருந்து புதிய லாரியை டெலிவரி கொடுக்க பங்களாதேஷ் சென்றேன். பின்னர் கடந்த 2ம் தேதி காலை வாகனத்தை டெலிவரி செய்துவிட்டு ஊர் திரும்புவதற்காக ஹவுரா அருகே உள்ள சாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தேன். நான் எஸ்.1 கோச்சில் மேற்படுக்கையில் படுத்து கொண்டிருந்தேன். 2ம் தேதி மாலை சரியாக 6.50 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ரயில் தடம் புரண்டது. அதன் பின்னர் சிறிது தூரம் எங்கள் பெட்டிகள் அனைத்தும் இழுத்துச்சென்றது. சில நிமிடங்களில் எங்கள் பெட்டிகளில் இருந்தவர்கள், மேலே படுத்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து உருண்டனர். தொடர்ந்து சிறிது நேரத்தில் பெட்டி தலைகீழாக கவிழ்ந்தது. இடிபாடுகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். காப்பாற்றும்படி அனைவரும் அலறினோம்.

இதில் பலர் படுகாயம் அடைந்தனர். பலருக்கு கை, கால் மற்றும் தலை துண்டானது. எங்கள் கோச்சில் மட்டும் 10 பேர் இறந்தனர். அதன்பின்னர் எங்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகள் சிக்கியிருந்த எங்களில் பலரை மீட்டனர். இதில் எனக்கு கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் எங்களை வேறு ஒரு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறோம்.

என்னுடன் மொத்தம் 6 டிரைவர்கள் சேர்ந்து பங்களாதேஷ் சென்றோம். அதில் கேரளாவை சேர்ந்த ஒருவர், திருச்சியை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த 4 பேர் அனைவரும் படுகாயத்துடன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.இந்த கோர விபத்தை நாங்கள் பார்க்கும்போது நாங்களே உயிரோடு இருக்கிறோமா? என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. ஒரிசா மருத்துவமனை முழுவதுமே ஒரே அழுகுரல் சத்தமாகவே இருந்தது. கடவுளின் ஆசீர்வாதத்தால் நாங்கள் உயிர் தப்பியுள்ளோம். இந்த விபத்தில் முன்பதிவு செய்யாத 3 பெட்டிகள் இருந்தது. அந்த 3 பெட்டிகளும் நொறுங்கியது. அதில் கழிவறையில் கூட பயணிகள் அமர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்த சோகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கடவுள் அருளால் உயிர் பிழைத்தோம்: சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய லாரி டிரைவர் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : God ,Urukum ,Odisha ,Tirupattur ,Urukkam ,
× RELATED பக்தர்களை காண தெய்வம் நேரில் வரும் அதிசயம்!