×

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து

சென்னை: வடசென்னை புளியந்தோப்பில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதேபோல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆகும்.

இதனால், நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதிய செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் 3ம் தேதி(நேற்று) மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்க இருந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற இருந்தார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு செய்திருந்தார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 1 லட்லம் பேர் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இருக்கைகள் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜா தர்பார் போல மேடை அமைக்கப்பட்டிருந்தது. மலையில் உதயசூரியன் உதிப்பது போலவும் அதில், ஒரு பக்கம் கலைஞர் மற்றொரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவது போல அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் வாழை மரங்கள், 100 அடியில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் சேகர்பாபு பிரமாண்டமாக செய்திருந்தார். ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

The post ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Artist centenary public meeting ,Odisha train accident ,CHENNAI ,public ,Pulianthop, North Chennai ,Chief Minister ,Odisha Centenary Celebration Public Meeting ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...