×

ஒடிசா ரயில் விபத்து: மீட்கும் பணி நிறைவு! காவச் எனும் பாதுகாப்பு அம்சம் இல்லை: ரயில்வே செய்தி தொடர்பாளர்!

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் – சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 288க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 900 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து பகுதியில் 15 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரயில்வே செய்தி தொடர்பாளர், “விபத்தில் பயணிகள் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன, இப்போது மறு சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி உள்ளோம். விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று இரவு ரயில் விபத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த பயணிகள் மீட்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ரயில் விபத்துகளை தவிர்க்க தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படும் பாதுகாப்பு அம்சமான காவச் என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை.அதாவது, ரயில்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தரும் காவச் என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 39 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, 10 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 100க்கும் மேற்பட்டோர் கருணைத் தொகையை கோரியுள்ளனர்,”என்றார்.

The post ஒடிசா ரயில் விபத்து: மீட்கும் பணி நிறைவு! காவச் எனும் பாதுகாப்பு அம்சம் இல்லை: ரயில்வே செய்தி தொடர்பாளர்! appeared first on Dinakaran.

Tags : Odisha Train Accident ,kawach ,Bubaneshwar ,Odisha train ,Odisha ,Kavach ,
× RELATED 160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை