×

ஒடிசா ரயில் விபத்து: தமிழ்நாட்டு பயணிகளில் 127 பேரிடம் பேசியுள்ளோம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணித்த தமிழ்நாட்டு பயணிகளில் 127 பேரிடம் பேசியுள்ளோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணித்த தமிழ்நாட்டு பயணிகளில் 127 பேரிடம் பேசியுள்ளோம். மாநில கட்டுப்பாட்டு அறையை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு இரு அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் அங்கேயே இருந்து பணிகளை நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்னும் இரு பெட்டிகளை கணக்கெடுக்க முடியவில்லை.

அதனால் தான் உயிரிழப்பு குறித்த தகவல் காலதாமதமாகியுள்ளது. அவை அனைத்தையும் கணக்கெடுத்த பிறகு தான் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரும். அதன் பின்னரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்துள்ளார்களா? அவ்வாறு இருப்பின் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரியவரும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளில் அம்மாநில மொழி பேசும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளோம். மேலும் மீட்புப்படை வீரர்கள் அனுப்பலாமா எனக் கேட்டதற்கு எங்களிடமே ஆட்கள் தயாராக உள்ளனர் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.

எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விபரம் தெரிய வராததன் காரணம், மூன்று வண்டிகள் பெரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டிகளை உடைத்து காயம் பட்டவர்களை மீட்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க வேண்டும். அதனால் சிறிது காலதாமதம் ஆகலாம். அரசு கொடுக்கும் தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பதால் இருமுறை உறுதி செய்த பின் அளிக்கப்படலாம். சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்து காயமடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதையும் செய்வார். எனக் கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்து: தமிழ்நாட்டு பயணிகளில் 127 பேரிடம் பேசியுள்ளோம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Odisha ,train accident ,Tamil Nadu ,Minister ,K. K.K. S.S. S.S. R.R. Ramachandran ,Chennai ,Coramanthal Express ,Odisha Train Accident ,Dinakaran ,
× RELATED உடல் உறுப்பு தானம் வழங்குவோரின்...