தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குட்பட்ட தாம்பரம், முடிச்சூர், பீர்க்கன்காரணை, செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் உள்பட 31 இடங்களில் சட்டவிரோத மதுபான பார்கள் இயங்கி வந்தன.இந்த பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு சம்பந்தப்பட்ட மதுபான பார்களில் இருந்து மாதந்தோறும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டவிரோத பார்களை சீல் வைத்து மூட மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டதின்படி தாம்பரம் வட்டாட்சியர் கவிதா தலைமையில் வருவாய்த்துறையினர் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி சட்டவிரோதமாக செயல்பட்ட 31 மதுபான பார்களுக்கு சீல் வைத்தனர். சட்டவிரோத பார்கள் நடத்த உடந்தையாக இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரித்தனர்.
The post தாம்பரம் சுற்றுப்பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 31 மதுபான பார்களுக்கு சீல் appeared first on Dinakaran.