×

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!: வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. பால்குடம், காவடி எடுத்து தரிசனம்..!!

சென்னை: வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருக கடவுள் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர நாள், வைகாசி விசாகம் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் விசாகத்தை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பால் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினர்.

திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், காவடி, பறவை காவடி தேர் எடுத்து முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழாவையொட்டி ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 1;30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பால் காவடி, பன்னீர் காவடியுடன் பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி, பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர் சோலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!: வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. பால்குடம், காவடி எடுத்து தரிசனம்..!! appeared first on Dinakaran.

Tags : Vitrivel Murugan ,Murugan ,Vigasi ,Visakam ,Balkudam ,Kavadi ,Chennai ,Vaigasi ,God ,Muruka ,Arokara ,Vivivel Murugan ,Vigasi Visakha ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்