×

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ ராஜினாமா

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராங்கோ, ஜலந்தர் பிஷப் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. கடந்த 2013ம் ஆண்டு இவரை பிஷப்பாக போப் நியமித்தார். இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிஷப் பிராங்கோ தன்னை பலாத்காரம் செய்ததாக கோட்டயம் அருகே குரவிலங்காட்டிலுள்ள மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி கடந்த 2017ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குரவிலங்காடு போலீசார் பிஷப் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்தனர். 2 மாதங்களுக்குப் பின்னர் பிஷப் பிராங்கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிஷப் பிராங்கோவுக்கு எதிரான போதுமான சாட்சியங்களை போலீஸ் தரப்பு தாக்கல் செய்யவில்லை என்று கூறி நீதிபதி கோபகுமார் அவரை விடுவித்து உத்தரவிட்டார். கோட்டயம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக கேரள அரசு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஷப் பிராங்கோ நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவருடைய ராஜினாமாவை போப் ஆண்டவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் பிராங்கோ தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், வாடிகன் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ராஜினாமா செய்தார் என்றும் கூறப்படுகிறது.

The post கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Jalandar Bishop ,Franco ,Thiruvananthapuram ,Jalandhar Bishop ,Punjab ,Dinakaran ,
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...