×

நோய் தடுப்பு, உணவு முறை, மருத்துவ ஆலோசனை மக்கள் நலன் காக்கும் ‘நலம் 365’: மக்கள் நல்வாழ்வுத்துறையின் முயற்சி வெற்றி

மதுரை: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘நலம் 365’ யூடியூப் சேனல் கடந்த ஜன. 2ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக துவங்கப்பட்டது. பொது மருத்துவ திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், சுகாதார துறையின் மக்கள் நலத் திட்டங்கள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணர்வு உள்பட மருத்துவ துறை சார்ந்த முழுமையான தகவல்கள் எளிய மொழியில் எளிய மக்களை சென்றடையும்விதமாக இந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது. உடல் நலத்தின் அவசியம் மற்றும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், குழந்தை வளர்ப்பு, மருத்துவ ரீதியான ஆலோசனைகள் உள்ளிட்டவை இந்த சேனலில் இடம் பெற்றுள்ளது. உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளும் கற்று தரப்படுகிறது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவத்துறை நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

இந்த சேனலில் மக்கள் எந்நேரமும் மருத்துவம் சார்ந்த பிரச்னைகளை தெரிவிக்கும் வசதி உள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறியும் முறை, கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பள்ளி சிறார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான மருத்துவ சேவைகள், ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பற்றிய தகவல்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சுமார் 7 ஆயிரம் பேர் இந்த யூடியூப் சேனலில் இணைந்துள்ளனர். பல மருத்துவ வீடியோக்களை பார்த்து பகிர்ந்துள்ளனர். மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு தலைப்புகளில் 158 வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மக்களின் நல்வாழ்வு துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ‘நலம் 365’ யூடியூப் சேனல் மூலம் பொதுமக்களுக்கு ஆரோக்கிய வாழ்வியலுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அடிப்படையான மருத்துவ அறிவை, புரிதலை, விழிப்புணர்வை பொதுமக்களுக்கு இந்த சேனல் ஏற்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் தங்களின் மருத்துவ பிரச்னைகள் குறித்து மருத்துவ நிபுணர்களிடம் நேரிடையாக கேட்டு கலந்துரையாடி பயனடைந்து வருகின்றனர்’’ என்றனர்.

* சிகிச்சை வழிமுறையை சிறப்பாக விளக்குகிறது
‘நலம் 365’ சேனலில் நோய்கள் வரும் முன் தடுப்பதற்குரிய ஆரோக்கிய உணவுகள் மற்றும் வாழ்வியல் முறைகள், நோய்களின் அறிகுறிகள், அதன் பாதிப்புகளை கண்டறிந்து தகுந்த மருத்துவர் ஆலோசனை பேரில் எடுத்துக் கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், எந்தெந்த நோயாளிகள் எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும். தவிர்க்க வேண்டும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஆதற்குரிய வாழ்வியல் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக மருத்துவ நிபுணர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.

The post நோய் தடுப்பு, உணவு முறை, மருத்துவ ஆலோசனை மக்கள் நலன் காக்கும் ‘நலம் 365’: மக்கள் நல்வாழ்வுத்துறையின் முயற்சி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Welfare 365 ,YouTube ,People's Welfare Department of the Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை